தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு :தி.மு.க., வினர் வீடுகளில் கருப்புக்கொடி
தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு :தி.மு.க., வினர் வீடுகளில் கருப்புக்கொடி
ADDED : ஏப் 16, 2026 11:12 PM

புதுச்சேரி:தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., வினர் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றியும், மசோதா நகலை எரிந்தும் போராட்டம் நடத்தினர்.
பார்லிமெண்ட் சிறப்பு கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட உள்ள தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு தி.மு.க., எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தொகுதி மறுவரையறை என்ற பெயரில் மத்திய பா.ஜ., அரசு தென்னிந்திய மாநிலங்களின் தொகுதிகளை குறைக்க திட்டமிட்டுள்ளதாக தி.மு.க., தலைவர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தமிழகத்தில் நேற்று கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடத்தவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.
இதை பின்பற்றி புதுச்சேரி தி.மு.க., சார்பில், கருப்புக்கொடி ஏற்றும் போராட்டம் நடந்தது. லப்போர்த் வீதியில் உள்ள தி.மு.க., தலைமை அலுவலகம் முன், மாநில அமைப்பாளர் சிவா கருப்புச்சட்டை அணிந்து, கருப்புக்கொடி ஏற்றினார். தொடர்ந்து மசோதா நகலை எரித்து போராட்டம் நடந்தது.
அனிபால்கென்னடி எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., மூர்த்தி, தி.மு.க., வேட்பாளர்கள் கோபால், விக்னேஷ் கண்ணன், தொகுதி செயலாளர்கள் சக்திவேல், நடராஜன் மற்றும் நிர்வாகிகளும் கருப்பு சட்டை அணிந்து பங்கேற்றனர். இதேபோல தி.மு.க., நிர்வாகிகள், பிரமுகர்களின் வீடுகளிலும் கருப்புக்கொடி ஏற்றப்பட்டது.
