பிரெஞ்சு மொழி விவகாரத்தில் போராட்டம்: தி.மு.க., அமைப்பாளர் சிவா அறிவிப்பு
பிரெஞ்சு மொழி விவகாரத்தில் போராட்டம்: தி.மு.க., அமைப்பாளர் சிவா அறிவிப்பு
UPDATED : மே 16, 2026 07:46 PM
ADDED : மே 16, 2026 07:42 PM

புதுச்சேரி: புதுச்சேரி மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி பாடத்திட்டம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என, முதல்வர் ரங்கசாமிக்கு, தி.மு.க., அமைப்பாளர் சிவா வலியுறுத்தியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கை:
பிரெஞ்சு மொழியை படிக்க விரும்பும் மாணவர்கள், அதை 3-வது அல்லது 4-வது மொழியாகத்தான் படிக்க வேண்டும் என்ற தற்போதைய புதிய விதிமுறை முற்றிலும் தேவையற்றது. ஒரு சர்வதேச மொழியைக் கூடுதல் சுமையாக மாற்ற நினைக்கும் சி.பி.எஸ்.இ.,-யின் இந்த தன்னிச்சையான போக்கை வன்மையாகக் கண்டிக்கிறோம். புதுச்சேரி மாணவர்களின் மொழி உரிமை பறிக்கப்படும் போது, அரசு மெத்தனப் போக்குடன் அமைதி காப்பது வேதனையளிக்கிறது.
முதல்வர் ரங்கசாமி, இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, பிரெஞ்சு மொழி பாடத்திட்டம் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். வரும் காலங்களில் புதுச்சேரி மண்ணில் இருந்து பிரெஞ்சு மொழியை நீக்க முடியாதபடி, அதற்கான நிரந்தர சட்டப்பூர்வப் பாதுகாப்பையும், சிறப்பு விலக்கையும் மத்திய அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும்.
மத்திய அரசின் உத்தரவுக்கு அடிபணிந்து வழக்கம்போல் முதல்வர் தலையாட்டி பொம்மையாக அமைதியாக இருந்தால், அனைத்துத் தரப்பு மக்களையும் திரட்டி தொடர் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
