காங்., கட்சி மீது தி.மு.க.,வினர் கொந்தளிப்பு கூட்டணியை தொடர்வதில் சிக்கல்
காங்., கட்சி மீது தி.மு.க.,வினர் கொந்தளிப்பு கூட்டணியை தொடர்வதில் சிக்கல்
ADDED : ஏப் 29, 2026 04:31 AM

புதுச்சேரி சட்டசபை தேர்தலுக்கு கடந்த ஓராண்டிற்கு முன்பாகவே இண்டி கூட்டணியை சேர்ந்த காங்., மற்றும் தி.மு.க.,வினரும் மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் களப்பணி மேற்கொண்டனர்.
இந்நிலையில் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் இரு கட்சிகளிடையே ஏற்பட்ட போட்டா போட்டி காரணமாக, அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப மனு தாக்கல் செய்தனர். ஒருவழியாக மனு தாக்கல் முடிந்த பின் காங்., கட்சிக்கு 16 தொகுதி, மீதமுள்ள 14 தொகுதிகள் தி.மு.க., உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் என முடிவு செய்யப்பட்டது.
அதனையேற்று தி.மு.க., ஒரு தொகுதியை வி.சி.க.,விற்கு ஒதுக்கியது. மீதி 13 தொகுதிகளில் போட்டியிட்டது. பிற தொகுதிகளில் மனு தாக்கல் செய்தவர்கள், கட்சி தலைமை உத்தரவை ஏற்று பலர் வாபஸ் பெற்றனர். வாபஸ் பெறாதவர்களுக்கு கட்சி சார்பில் 'பி' படிவம் வழங்கவில்லை.
ஆனால், காங்., கட்சியினர், கூட்டணி தர்மத்தை மீறி தி.மு.க., போட்டியிட்ட 13 தொகுதிகளில் காலாப்பட்டு, ராஜ்பவன், மங்கலம், திருபுவனை (தனி) மற்றும் காரைக்கால் தெற்கு ஆகிய 5 தொகுதிகளில் கட்சியின் 'பி'படிவத்துடன் மனு தாக்கல் செய்தனர்.
அதேபோன்று கூட்டணி கட்சியான வி.சி.க., போட்டியிட்ட உழவர்கரை தொகுதியிலும் காங்., சார்பில் போட்டியிட்டார். அவர்கள் காங்., தலைமை உத்தரவிட்டும் வாபஸ் பெற மறுத்துவிட்டனர்.
இது தி.மு.க.,வினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. இருப்பினும், அதனை வெளிக்காட்டிக் கொள்ளாமல், தேர்தல் பணியை மேற்கொண்டனர்.
இந்நிலையில், இண்டி கூட்டணி வேட்பாளர்களை ஆதிரித்து பிரசாரம் செய்ய கடந்த 6ம் தேதி புதுச்சேரி வந்த லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், விமான நிலையத்தில் தி.மு.க., வை எதிர்த்து போட்டியிட்ட 5 வேட்பாளர்களுக்கு ஆசி வழங்கியது தி.மு.க.,வினரை எரிச்சலடைய செய்தது.
இருப்பினும், தி.மு.க., 14 தொகுதிகளிலும் கடுமையாக பணியாற்றியது.
தி.மு.க.,விற்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில் போட்டியிட்ட காங்., கட்சியின் அதிருப்தி வேட்பாளர்கள், கடைசி நேரத்தில் 'ப' வைட்டமினை தாராளமாக வழங்கினர். இதனால், தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என, தெரியாமல், தி.மு.க.,வினர் தவித்து கொண்டிருக்கும் நிலையில், காங்., கட்சியின் அதிருப்தி வேட்பாளர்களுக்கு தேர்தல் செலவிற்கு அக்கட்சியே போதிய அளவிற்கு நிதி உதவி செய்த தகவல் தற்போது வெளியாகியது.
இது, ஒட்டுமொத்த தி.மு.க.,வினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
இனி, புதுச்சேரியில் காங்., கட்சியுடன் கூட்டணி தொடர்வதில் அர்த்தமில்லை என்பதால், வரும் 4ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், அடுத்தக்கட்ட அரசியல் பயணத்தை மாற்றி அமைக்க கட்சி தலைமையிடம் வலியுறுத்த தி.மு.க.,வினர் முடிவு செய்துள்ளனர். இதனால், புதுச்சேரியில் இண்டி கூட்டணி தொடர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
