'புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தி.மு.க., போட்டியிட வேண்டும்'
'புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் தி.மு.க., போட்டியிட வேண்டும்'
ADDED : பிப் 21, 2026 07:10 AM

புதுச்சேரி: ''முதல்வர் ஸ்டாலின் நன்றி உணர்வை காங் கிரஸ் நினைத்துப் பார்க்க வேண்டும்,” என முன்னாள் மத்திய அமைச்சரும், தி.மு.க., - எம்.பி.,யுமான ஜெகத் ரட்சகன் தெரிவித்தார்.
புதுச்சேரியில், சட்ட சபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், காலாப்பட்டு, முத்தியால்பேட்டை, உப்பளம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், ஜெகத்ரட்சகன் எம்.பி., பங்கேற்றார்.
பின், அவர் அளித்த பேட்டி:
புதுச்சேரிக்கு வந்த காங்., பொதுச்செயலர் வேணுகோபாலிடம், '18 தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும்' என அக்கட்சியினர் வலியுறுத்தி உள்ளனர். கட்சியினரை உற்சாகப்படுத்த அப்படி பேசியுள்ளதாக நினைக்கிறேன்.
புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தி.மு.க., போட்டியிட வேண்டும் என்பது எங்களின் ஆசை. கடந்த 2021 தேர்தலில், தனியாக விட்டிருந்தால், புதுச்சேரியில் 30 தொகுதிகளிலும் உதயசூரியன் உதித்திருக்கும்.
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் அளிக்கும் திட்டங்கள், புதுச் சேரிக்கும் வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்.
தி.மு.க., கூட்டணி யில் தே.மு.தி.க., சேர்ந்தது, வரவேற்கக் கூடியது. விஜயகாந்த், தி.மு.க.,வில் பொறுப்பில் இருந்தவர். எங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்.
'இண்டி' கூட்டணிக்கு தலைமையேற்கும் தகுதி முதல்வர் ஸ்டாலினுக்கு தான் உண்டு என, மணிசங்கர் அய்யர் சொல்கிறார். மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் என பல மாநிலத் தலைவர்களும் சொல்கின்றனர்.
ஆனால், முதல்வர் ஸ்டாலின், மிகவும் பெருந்தன்மையோடு ராகுலை பிரதமராக்கு வேன் என, முதன் முதலில் கூறினார். அந்த நன்றி உணர்வை காங்., கட்சியினர் நினைத்து பார்க்க வேண்டும். கூட்டணியை, தி.மு.க., மதிப்பது போல, உலகில் வேறு எந்த கட்சியும் கிடையாது.
தமிழகத்தில், மத்திய அரசு ஒரு பைசா தரா விட்டாலும், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 5,000 ரூபாயை முதல்வர் ஸ்டாலின் தந்துள்ளார். புதுச்சேரியில், தேர்தல் வரப்போகிறது; பிரதமர் வரப்போகிறார்; 10,000 ரூபாய் தருவதாக சொல்வர். குடும்பத்துக்கு 25,000 ரூபாய் தர வேண்டும் என கேளுங்கள்.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கேட்டோம்; புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற ஸ்டாலினால் தான் முடியும். கருணாநிதி ரத்தம் சிந்திய திராவிட மண்ணான புதுச்சேரியை காக்கும் பொறுப்பு தி.மு.க.,வுக்கு உண்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
