முன் அனுமதி இல்லாமல் எதையும் செய்யாதிங்க... அதிகாரிகளுக்கு கவர்னர் 'கிடுக்கிப்பிடி'
முன் அனுமதி இல்லாமல் எதையும் செய்யாதிங்க... அதிகாரிகளுக்கு கவர்னர் 'கிடுக்கிப்பிடி'
ADDED : ஜூன் 07, 2026 03:39 AM
புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 9 மற்றும் 23ம் தேதிகளில் சட்டசபை தேர்தல் நடந்தது. இந்த ஓட்டுகள் கடந்த மே 4 ம் தேதி எண்ணி முடிவுகள் அறிவிக்கப்பட்டன. தமிழகம், கேரளா, அஸ்சாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் புதிய அரசு பொறுப்பேற்று திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
ஆனால், புதுச்சேரியில் வெற்றி பெற்ற தே.ஜ., கூட்டணியில் அமைச்சரவை பதவிகளை பங்கிட்டு கொள்வதில் என்.ஆர்.காங்., மற்றும் பா.ஜ.,விடையே கடும் இழுபறி நீடித்து வருகிறது. அதனால், முதல் கட்டமாக கடந்த 13ம் தேதி முதல்வராக ரங்கசாமி, அமைச்சர்களாக பா.ஜ., நமச்சிவாயம், என்.ஆர்.காங்., மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் பொறப்பேற்றனர். தொடர்ந்து தற்காலிக சபாநாயகர் நியமிக்கப்பட்டு கடந்த 20ம் தேதி எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்றனர்.
மீதமுள்ள மூன்று அமைச்சர் மற்றும் சபாநாயகர் பதவி பங்கீட்டில் இரு கட்சிகளிடையே நிலவி வரும் போட்டா போட்டியால் அரசு நிர்வாகம் முற்றிலுமாக ஸ்தம்பித்துள்ளது.
இந்நிலையில் கவர்னர் கைலாஷ்நாதன், கடந்த வாரம் அனைத்து துறை தலைவர்கள் மற்றும் துறை செயலர்களை அழைத்து துறை வாரியான பிரச்னைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் பேசுகையில், 'எந்த கொள்கை முடிவாக இருந்தாலும், துவக்கத்திலேயே எனது அனுமதி பெற வேண்டும். நிதி விவகாரங்களில் தேவையற்ற செலவுகளை தவிர்க்க வேண்டும். அதேபோன்று, அதிகாரிகள், ஊழியர்கள் மூன்றாண்டிற்கு ஒரு முறை இடமாறுதல் உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும். பதவி உயர்வு வேண்டாம் என ஒரே இடத்தில் இருப்பவர்களை கட்டாயம் இடமாற்றம் செய்ய வேண்டும்.
அதேபோன்று, பிராந்திய அளவிலான இடமாற்றங்களும் கட்டாயம் பின் பற்ற வேண்டும். இந்த உத்தரவுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
