/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு வீடாக தபால் ஓட்டு பெறும் பணி... துவங்கியது; பூத் சிலிப் 5ம் தேதி முதல் வினியோகம்
/
வீடு வீடாக தபால் ஓட்டு பெறும் பணி... துவங்கியது; பூத் சிலிப் 5ம் தேதி முதல் வினியோகம்
வீடு வீடாக தபால் ஓட்டு பெறும் பணி... துவங்கியது; பூத் சிலிப் 5ம் தேதி முதல் வினியோகம்
வீடு வீடாக தபால் ஓட்டு பெறும் பணி... துவங்கியது; பூத் சிலிப் 5ம் தேதி முதல் வினியோகம்
ADDED : ஏப் 03, 2024 07:19 AM
புதுச்சேரி, : புதுச்சேரியில் மாற்றுத்திறனாளிகள், 85 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களி ன்வீடுகளுக்கு நேரடியாக சென்று தபால் ஓட்டு பெறும் பணி நேற்று துவங்கியது. அடுத்தகட்டமாக வீடு வீடாக வாக்காளர்களுக்கு பூத் சிலிப் வழங்கும் பணி 5ம் தேதி முதல் துவங்குகிறது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு 19ம் தேதி நடக்கிறது. தேர்தலில் இண்டியா கூட்டணி சார்பில் காங்., வேட்பாளர் வைத்திலிங்கம், பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம், அ.தி.மு.க., சார்பில் தமிழ்வேந்தன் உட்பட 26 பேர் போட்டியிடுகின்றனர்.
மொத்த ஓட்டு
புதுச்சேரியில் ஆண்கள் 4,80,569, பெண்கள் 5,42,979, மூன்றாம் பாலினத்தவர் 151 பேர் என மொத்தம் 10,23,699 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்கார்கள் 1,609 பேர், மாற்றுத்தினாளி வாக்காளர்கள் 1,322 பேர் உள்ளனர்.
தபால் ஓட்டு
இவர்கள் வீட்டிற்கு வந்து தங்களின் ஓட்டினை பதிவு செய்ய தேர்தல் துறையிடம் விண்ணப்பித்து இருந்தனர். இதையெடுத்து 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடி ஓட்டுபோடும் பணி நேற்று துவங்கியது. இரண்டு ஓட்டுச்சாவடி அலுவலர்கள், ஒரு நுண் பார்வையாளர், ஒரு போட்டோகிராபர், போலீஸ் என 5 பேர் கொண்ட குழுவினர் மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் வீடுகளுக்கு ஓட்டு பெட்டியுடன் நேரடியாக சென்று ஓட்டுக்களை பெற்று வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள் ஓட்டு அளிப்பது வீடியோ பதிவு செய்யப்பட்டது. தபால் ஓட்டு பெறும் பணி வரும் 6ம் தேதி வரை நடக்கிறது.
பூத் சிலிப் எப்போது
வாக்காளர் தகவல் சீட்டான பூத் சிலிப் வினியோகம் செய்யும் பணி வரும் 5ம் தேதி துவங்கி 14ம் தேதி வரை நடக்கும் என, தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் அறிவித்துள்ளார். பார்வையற்ற வாக்காளர்கள் பிரெய்லி முறையில் வாக்களிப்பதற்காக அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் பிரெய்லி முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. பிரெய்லி முறையை வாசிக்கத் தெரிந்த பார்வையற்ற வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி ஓட்டளிக்கலாம் என, தேர்தல் துறை அறிவித்துள்ளது.
மாதிரி ஓட்டுச் சாவடி
லோக்சபா தேர்தல் சில வசதிகளைக் கூடுதலாகக் கொண்ட தனித்துவம் வாய்ந்த மாதிரி ஓட்டுசாவடிகள் ஏற்படுத்தப்பட உள்ளது. கைக்குழந்தைகளுடன் வரும் மகளிர் ஓட்டளிக்க ஏதுவாக, குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
மாகியில் புதுமை
மாகி பகுதியில் உள்ள அனைத்து ஓட்டுச்சாவடிகள், பெண் அரசு ஊழியர்களால் நிர்வகிக்கப்பட உள்ளது. மாகி பகுதியில் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாலும், மகளிரால் தேர்தலைச் சிறப்பாக நடத்த முடியும் என்பதை நிருபிக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, மாற்றுத் திறனாளி அரசு ஊழியர்களை மட்டுமே கொண்டு நிர்வகிக்கப்படும் ஒரு ஓட்டுச்சாவடி, ஒவ்வொரு பிராந்தியத்திலும் அமைக்கப்படுகிறது. இதேபோல் இளம் வாக்காளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதிதாகப் பணியில் சேர்ந்த இளம் அரசு ஊழியர்களைக் கொண்டு நிர்வகிக்கப்படும் 11 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.

