பாடங்கள் தொடர்பாக வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்டு படிக்க வேண்டும் டாக்டர் மதுமதி ஆலோசனை
பாடங்கள் தொடர்பாக வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்டு படிக்க வேண்டும் டாக்டர் மதுமதி ஆலோசனை
ADDED : ஏப் 04, 2026 09:53 PM

புதுச்சேரி: மாணவர்கள் தேர்வு செய்யும் பாடப்பிரிவுகள் தொடர்பாக, அந்த துறை வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்டு படிக்க வேண்டும் என டாக்டர் மதுமதி பேசினார்.
புதுச்சேரியில் தினமலர் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் சார்பில், நடந்த வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது;
இந்தியாவில் 90 சதவீதம் மாணவர்கள் அடுத்து என்ன படிக்க போகிறோம் என்ற குழப்பத்தில் உள்ளனர். அது மாணவர்களின் குறை இல்லை. நம்முடைய கல்வி சிஸ்டம் அப்படி உள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் நம் உலகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. மாறதா விஷயங்களில் ஒன்று நம்மிடம் உள்ள வாழ்க்கையை தேர்வு செய்யும் முறை. நம் பெற்றோர்களின் கனவு மற்றும் அவர்களின் முடிவை வைத்து திட்டமிட்டுள்ளோம். சிலர் படித்த படிப்பிற்கு சம்மந்தமே இல்லாத வேலையை பார்க்கின்றனர். நாம் படிக்கும் படிப்பின் மீது ஆர்வம் இருக்க வேண்டும். அதற்கான தனி திறமையும் வேண்டும்.
மூன்று அல்லது நான்கு பாடப்பிரிவுகளை தேர்வு செய்ய வேண்டும். அவைகள் தொடர்பான வல்லுநர்களை சந்தித்து ஆலோசனை கேட்டு, ஒரு பாடப்பிரிவை தேர்ந்தெடுக்கலாம். மருத்துவ வளர்ச்சியால், நம் ஆயுட்காலம் அதிகரித்துள்ளது. மருத்துவ துறையில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது. மருத்துவ துறையை தேர்ந்தெடுத்தால் பொறுமை இருக்க வேண்டும். மருத்துவத்துறையில் எம்.பி.பி.எஸ்., மட்டுமின்றி நர்ஸ், லேப் டெக்னிஷியன் உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளது. அதனை தேர்ந்தெடுத்து படித்தால் வேலை வாய்ப்பு உள்ளது.
எம்.பி.பி.எஸ்., படித்தால், அவ்வளவு ஈசியாக அரசு வேலையில் சேர முடியாது. அவ்வளவு போட்டி உள்ளது. ஒரு எம்.பி.பி.எஸ்., படித்த டாக்டரின் தற்போதைய மாத சம்பளம் 20 முதல் 25 ஆயிரம் மட்டுமே. எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் கடின உழைப்பு இருந்தால் அந்த துறையில் வெற்றி பெறலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
