ADDED : செப் 23, 2026 05:54 AM

வில்லியனுார்: அரசு மற்றும் தனியார் பஸ்கள் வில்லியனுார் ஊர் உள்ளே செல்ல கோரி ரவிக்குமார் எம்.எல்.ஏ., பஸ் டிரைவர்களுக்கு சால்வை அணிவித்து பஸ்சை ஊருக்குள் அனுப்பி வைத்தார்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், வில்லியனுார் பைபாஸ் வழியாக செல்வதால் இரவு நேரங்களில் பயணிகள் பெரும் துயரத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து பெண்கள் மற்றும் பயணிகள் வில்லியனுார் எம்.எல்.ஏ., ரவிக்குமாரிடம் புகார் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து புதுச்சேரியில் இருந்து வில்லியனுார் வழியாக இரவு நேரங்களில் செல்லும் அனைத்து பஸ்களும் பைபாஸ் எம்.ஜி.ஆர்., சிலை பகுதியில் நிறுத்தி டிரைவர் மற்றும் கண்டக்டர்களுக்கு ரவிக்குமார் எம்.எல்.ஏ., சால்வை அணிவித்து வில்லியனுார் ஊருக்குள்ளே வந்து செல்லுமாறு அன்பாக கோரிக்கை வைத்து ஊருக்குள் பஸ்சை திருப்பி அனுப்பி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் பாலமுருகன், சமூக சேவகர் கலிய முருகன், ராமன், ஆசிரியர் திருவரசன் உள்ளிட்ட நுாற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இரவு நேரம் என்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் நடக்காத வகையில் வில்லியனுார் சப் இன்ஸ்பெக்டர் திருமுருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
