போதை பொருள் ஒழிப்பு ஆலோசனை கலெக்டர் குலோத்துங்கன் பங்கேற்பு
போதை பொருள் ஒழிப்பு ஆலோசனை கலெக்டர் குலோத்துங்கன் பங்கேற்பு
ADDED : ஜூன் 25, 2026 06:57 AM

புதுச்சேரி: புதுச்சேரி மாவட்ட நிர்வாகம் சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் குலோத்துங்கன் தலைமையில் நடந்தது.
கூடுதல் கலெக்டர் சுதாகர், போலீஸ் எஸ்.பி., சுருதி, அரசு அதிகாரிகள், ஜிப்மர், பிம்ஸ், அறுபடை வீடு, வெங்கடேஸ்வரா மருத்துவக் கல்லுாரி, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லுாரி, மகாத்மா காந்தி மருத்துவக் கல்லுாரி, இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரிகளின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில், அனைத்து மருத்துவ கல்லுாரிகளில், போதைப் பொருளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறியப்பட்டது.
பின், கலெக்டர் குலோத்துங்கன் கூறுகையில், 'மருத்துவக் கல்லுாரிகள் அருகிலுள்ள நான்கு கிராமங்களை தத்தெடுத்து போதை பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லுாரிகளிலும் போதைப் பொருளால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கான தனி வார்டு அமைக்க வேண்டும்.
இந்திரா காந்தி மருத்துவ கல்லுாரியில் உள்ள லைவ் மியூசியத்தை அனைத்து பள்ளி மற்றும் மருத்துவ கல்லுாரி மாணவர்கள் பார்வையிட்டு போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்வுகளை தெரிந்து கொள்ள வேண்டும்.
போலீசார் தனியார் கூரியர் நிறுவனம் மற்றும் அனைத்து தபால் நிறுவனங்களையும் கண்காணிக்க வேண்டும். பள்ளி, கல்லுாரிகளுக்கு அருகிலுள்ள பெட்டிக்கடைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களையும் முக்கியத் துறைகள் ஒன்றிணைந்து தீவிர சோதனை நடத்த வேண்டும்.
போதை பொருட்கள் கடத்தலை தடுக்க கடலோர காவல் படையினர் ரோந்து பணியினை தீவிரப்படுத்த வேண்டும். அனைத்து மருத்துவக் கல்லுாரிகளும் தாங்கள் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என, அறிவுறுத்தினார்.
