போதை ஸ்டாம்ப் விற்ற வழக்கு: கேரள மாணவரிடம் விசாரணை
போதை ஸ்டாம்ப் விற்ற வழக்கு: கேரள மாணவரிடம் விசாரணை
ADDED : பிப் 27, 2024 07:14 AM

புதுச்சேரி: புதுச்சேரி ரெஸ்டோ பார்களில் எல்.எஸ்.டி.போதை ஸ்டாம்ப் விற்ற வழக்கில் கேரள மாணவரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி ரெஸ்டோ பார்களில் டி.ஜே. இசை நிகழ்ச்சி நடத்தும் நபர், போதை ஸ்டாம்ப் விற்பதாக வந்த புகாரை தொடர்ந்து, ரெஸ்டோ பார்களில் டி.ஜே. இசை நிகழ்ச்சி நடத்தும், லாஸ்பேட்டை தாகூர் நகர், 3வது குறுக்கு தெரு சிவசுப்ரமணியன் மகன் சசிதரன்,28; என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அதில், அவர் எல்.எஸ்.டி., (லைசர்ஜிக் ஆசிட் டர்திலாமைடு) என்கிற போதை ஸ்டாம்ப் 7 வைத்திருப்பதை கண்டுபிடித்தனர்.
.அவர் அளித்த தகவலின்பேரில், கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவ கல்லுாரி இறுதியாண்டு மாணவர் சென்னை காலடிப்பேட், வசந்த் நகர் ஆசிக், 23; தண்டையார்பேட்டை, கோதண்டராமன் லைனை சேர்ந்த பொறியியல் பட்டதாரி சந்தோஷ், 22; ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 13 போதை ஸ்டாம்ப்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இவர்கள் மூவரும், சென்னையில் தனியார் கல்லுாரியில் பயிலும் கேரள மாநில மாணவர்களிடம் போதை ஸ்டாம்ப் வாங்கி வந்து, புதுச்சேரி ரெஸ்டோ பார்களில் விற்றது தெரிய வந்தது.
இவர்கள் அளித்த தகவலின்பேரில் தனிப்படை போலீசார், சென்னையில் தனியார் பொறியியல் கல்லுாரியில் இறுதியாண்டு படித்து வரும் கேரள மாநில மாணவரை நேற்று பிடித்து புதுச்சேரிக்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். மேலும், தலைமறைவாகியுள்ள போதை ஸ்டாம்ப் விற்பனை கும்பலின் தலைவனை தனிப்படைபோலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
