மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி பெற இ-கே.ஓய்.சி., அவசியம்
மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி பெற இ-கே.ஓய்.சி., அவசியம்
UPDATED : மே 06, 2026 08:25 PM
ADDED : மே 06, 2026 08:21 PM

புதுச்சேரி: புதுச்சேரியில் மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சியை பெற இ-கே.ஓய்.சி., பதிவு அவசியம் என, குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து துறை இயக்குநர் அலுவலகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
மத்திய அரசின் உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் பரிந்துரைபேரில், பிரதான் மந்திரி கரிப்கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் புதுச்சேரியில் 'மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி' நடைமுறை கடந்த பிப்ரவரி 26ம் தேதி கொண்டு வரப்பட்டது.
இத்திட்டத்தில் இதுவரை சிவப்பு ரேஷன் கார்டுகளுக்கு வழங்கப்பட்டு வரும் டி.பி.டி., முறைக்கு பதிலாக 'மத்திய வங்கி டிஜிட்டல் கரன்சி' மூலம் நிதி வழங்கப்படும். இந்த டிஜிட்டல் கரன்சி வழங்கப்பட்ட நாள் முதல் மூன்று மாதங்கள் மட்டுமே செல்லுபடியாகும். அந்த காலத்திற்குள் பயனாளிகள் தங்களுக்குரிய அரிசியை வாங்கி கொள்ளலாம்.
டிஜிட்டல் கரன்சி கிடைக்க வேண்டுமெனில் அவசியம் இ-கே.ஓய்.சி., பதிவு செய்ய வேண்டும். ஏற்கனவே இ-கே.ஓய்.சி., பதிவு செய்தவர்கள் மீண்டும் பதிவு செய்ய வேண்டாம். இ-கே.ஓய்.சி. பதிவு செய்யாதவர்கள் அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்கு ரேஷன் மற்றும் ஆதார் கார்டுகளை கொண்டு சென்று, கட்டணம் ஏதுமின்றி பதிவு செய்து கொள்ளலாம். இ-கே.ஓய்.சி., பதிவு செய்தால் மட்டுமே டிஜிட்டல் கரன்சி பெற முடியும்.
மேலும், டிஜிட்டல் கரன்சி பதிவு செய்ய குடிசைப் பொருள் வழங்கல் துறை விரைவில் தொகுதி வாரியாக சிறப்பு முகாம் நடத்த திட்டமிட்டுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
