/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரி சட்டசபையில் இ-விதான் செயலி... துவக்கம்; அரசு செயலர்களுக்கு விரைவில் பயிற்சி
/
புதுச்சேரி சட்டசபையில் இ-விதான் செயலி... துவக்கம்; அரசு செயலர்களுக்கு விரைவில் பயிற்சி
புதுச்சேரி சட்டசபையில் இ-விதான் செயலி... துவக்கம்; அரசு செயலர்களுக்கு விரைவில் பயிற்சி
புதுச்சேரி சட்டசபையில் இ-விதான் செயலி... துவக்கம்; அரசு செயலர்களுக்கு விரைவில் பயிற்சி
ADDED : ஜூன் 10, 2025 05:31 AM

புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபையை, காகிதமில்லா சட்டசபையாக மாற்றுவதற்கான இ-விதான் தேசிய செயலியை மத்திய அமைச்சர் முருகன் நேற்று தொடங்கி வைத்தார்.
சட்டசபை மற்றும் நாடாளுமன்ற நிகழ்வுகளை மக்களும் அறிந்து கொள்வதற்காக, நாடாளுமன்றம் மற்றும் நாட்டில் உள்ள அனைத்து மாநில சட்டசபைகளையும் தேசிய இ-விதான் செயலி மூலம் இணைக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
நாட்டில் ஏற்கனவே 6 மாநிலங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ள நிலையில் 6வது மாநிலமாக புதுச்சேரி சட்ட சபையில் தேசிய 'இ-விதான் செயலி' அறிமுகப்படுத்துவதற்கு மத்திய மத்திய பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சகம் முழு நிதியளிக்க ஒப்புதல் அளித்தது.
அதனைத் தொடர்ந்து தேசிய இ-விதான் திட்டத்தை நிறைவேற்ற கடந்தாண்டு ஜூலை மாதம் கொல்கத்தாவை சேர்ந்த 'நிம்பஸ் சிஸ்டம் பிரைவேல் லிமிடெட்' நிறுவனம் தேர்வு செய்து ரூ.8.16 கோடிக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.
இந்நிறுவனம், புதுச்சேரி சட்டசபையில் தேசிய 'இ-விதான்' செயலி செயல் படுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டது.
அதற்காக சட்டசபையில் பயிற்சி மையம் அமைத்து எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கும் தேசிய இ-விதான் செயலி யின் பயன்பாடுகள் குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.
விரைவில் அரசு துறை செயலர்களுக்கும் தேசிய இ-விதான் செயலியின் பயன்பாடுகள் குறித்து பயிற்சி வழங்கப்பட உள்ளது.
பரிட்சாத்தமாக கடந்த மார்ச் மாதம் நடந்த புதுச்சேரி சட்டசபையின் 6-வது அமர்வில் கவர்னரின் உரை, முதல்வரின் பட்ஜெட் உரை, அலுவல் பட்டியல் ஆகியவை தேசிய இ-விதான் செயலி மூலம் எம்.எல்.ஏ.,க்களின் கேள்விகளுக்கான பதில்களை பதிவேற்றி சோதனை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சட்டசபை செயலகத்தில் உள்ள அனைத்து ஆவணங்களையும் கணினி (டிஜிட்டல்) மயமாக்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி சட்டசபையில் அமைக்கப்பட்டு வரும் தேசிய இ-விதான் செயலி அறிமுக விழா நேற்று அக்கார்டு ஓட்டலில் நடந்தது. கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். சபாநாயகர் செல்வம் நோக்கவுரையாற்றினார்.
மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் முருகன் குத்துவிளக்கேற்றி, தேசிய 'இ-விதான்' செயலியை துவக்கி வைத்து பேசினார்.
முதல்வர் ரங்கசாமி, பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சகத்தின் செயலர் உமங் நருலா, கூடுதல் செயலர் சத்திய பிரகாஷ் வாழ்த்துரை வழங்கினார்.
விழாவில், அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய்சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., அரசு கொறடா ஆறுமுகம், எம்.எல்.ஏ.,க்கள் கல்யாணசுந்தரம், பாஸ்கர், சம்பத், செந்தில்குமார், பிரகாஷ்குமார், சிவசங்கர், வெங்கடேசன், அசோக் பாபு, தலைமைச்செயலர் சரத் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சட்டசபை செயலர் தயாளன் நன்றி கூறினார்.