ADDED : பிப் 10, 2025 06:53 AM
திருக்கனுார் : திருக்கனுாரில் புதிய கட்டடத்தில் பெயிண்ட் வேலையின்போது, மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.
திருபுவனை அடுத்த வம்புபட்டு முருகாவரம் பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தன், 55; பெயிண்டர். இவருக்கு, கலா என்ற மனைவியும், ஒரு மகன், மகள் உள்ளனர். இவர், நேற்று முன்தினம் திருக்கனுார் பஜார் வீதியில், புதிதாக கட்டப்பட்டு வரும் வணிக வளாகத்தில், சக தொழிலாளர்களுடன் பெயிண்ட் அடிக்கும் வேலையில் ஈடுபட்டார். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டடத்தின் அருகே சென்ற உயர் மின்னழுத்த கம்பியில், கோவிந்தனின் கை பட்டதால், மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.
படுகாயமடைந்த கோவிந்தனை, அங்கிருந்தவர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மண்ணாடிப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக ஜிப்மருக்கு அழைத்து சென்றபோது, வழியிலேயே கோவிந்தன் இறந்தார். இதுகுறித்து அவரது மனைவி கலா, போலீசில் புகார் அளித்தார். திருக்கனுார் போலீசார், கட்டட உரிமையாளர் சேகர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.