வீட்டில் படுத்திருந்த இன்ஜினியர் கடப்பாறையால் அடித்து கொலை :புதுச்சேரியில் பயங்கரம்
வீட்டில் படுத்திருந்த இன்ஜினியர் கடப்பாறையால் அடித்து கொலை :புதுச்சேரியில் பயங்கரம்
UPDATED : ஏப் 28, 2026 07:30 PM
ADDED : ஏப் 28, 2026 07:21 PM
பாகூர்: கிருமாம்பாக்கம் அருகே வீட்டில் படுத்திருந்த இன்ஜினியரை கடப்பாறையால் அடித்து கொலை செய்த நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, மணப்பட்டு, மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் மணிகண்டன்,35; பி.டெக்., கெமிக்கல் இஞ்சினியர். சென்னையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த இவர், மன அழுத்தம் காரணமாக வேலையை விட்டு விட்டு, சொந்த ஊருக்கு வந்து, மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்தார்.
பின், புதுச்சேரி வடமங்கலத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த நிலையில், மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதால், வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வரும் வசந்தராஜா,47; தனது மனைவிக்கும், மணிகண்டனுக்கும் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து பிரச்னை செய்து வந்தார். இதன் காரணமாக வசந்தராஜா, தனது மனைவியை பிரிந்து கடந்த 2 மாதமாக தனது தாய் வீட்டில் வசித்து வந்தார்.
இவர், சில தினங்களுக்கு முன், மணிகண்டணின் பைக்கை எடுத்து சென்று அடமானம் வைத்து, மது குடித்துள்ளார். இதுகுறித்து மணிகண்டன் கொடுத்த புகாரின் பேரில், கிருமாம்பாக்கம் போலீசார் விசாரித்து வந்தனர்.
இந்நிலையில், ஏப்ரல் 27 இரவு மணிகண்டன் சாப்பிட்டு விட்டு, பக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டில் துாங்கினார். நேற்று விடியற்காலை 5 மணிக்கு எழுந்த மணிகண்டன், தனது வீட்டிற்கு சென்று டீ குடித்துவிட்டு, மீண்டும் பாட்டி வீட்டிற்கு சென்று படுத்து கொண்டார்.
சற்று நேரத்தில், மணிகண்டனின் அலறல் சத்தம் கேட்டு, அவரது தம்பி சேது ஓடி வந்து பார்த்தபோது மணிகண்டன் தலையில் பலத்த காயங்களுடன், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடன் அவரை மீட்டு, கிருமாம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி அளித்த பின், மேல் சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
தகவலறிந்த எஸ்.பி., சுப்ரமணி, பாகூர் இன்ஸ்பெக்டர் சஜித் மற்றும் கிருமாம்பாக்கம் போலீசார், தடய அறிவியல் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயுடன் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்து விசாரித்தனர்.
அதில், மணிகண்டனை, வசந்தராஜா கடப்பாறையால் தாக்கியது தெரிய வந்தது. அதன்பேரில், போலீசார் வசந்தராஜாவை பிடித்து விசாரித்து வருகின்றனர். இச்சம்பம் கிருமாம்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
