/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பந்த்' போராட்டத்தால் ஒட்டுமொத்த புதுச்சேரியும் முடங்கியது': சிறுமிக்கு நீதி கேட்டு அனைத்து தரப்பினரும் பங்கேற்பு
/
பந்த்' போராட்டத்தால் ஒட்டுமொத்த புதுச்சேரியும் முடங்கியது': சிறுமிக்கு நீதி கேட்டு அனைத்து தரப்பினரும் பங்கேற்பு
பந்த்' போராட்டத்தால் ஒட்டுமொத்த புதுச்சேரியும் முடங்கியது': சிறுமிக்கு நீதி கேட்டு அனைத்து தரப்பினரும் பங்கேற்பு
பந்த்' போராட்டத்தால் ஒட்டுமொத்த புதுச்சேரியும் முடங்கியது': சிறுமிக்கு நீதி கேட்டு அனைத்து தரப்பினரும் பங்கேற்பு
ADDED : மார் 09, 2024 02:44 AM

புதுச்சேரி: சிறுமிக்கு நீதி கேட்டு அரசியல் கட்சிகள், அமைப்புகள் நடத்திய பந்த் போராட்டத்தில் அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றதால், புதுச்சேரியின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதித்தது.
புதுச்சேரியை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இச் சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. சிறுமிக்கு நீதி கேட்டு கல்லுாரி, பள்ளி மாணவர்கள், சமூக அமைப்பினர், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் ஐந்து நாட்களாக சாலை மறியல் ஈடுபட்டனர்.
சட்டசபை முற்றுகை, கடலில் இறங்கி போராட்டம், ஆர்ப்பாட்டம், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை என பல இடங்களில் போராட்டம் வெடித்தது.
அரசியல் கட்சிகள் சிறுமி படுகொலையை கண்டித்து கண்டன குரல் எழுப்பின. மகளிர் தினம் கொண்டாடப்படும் 8ம் தேதி இண்டியா கூட்டணி, அ.தி.மு.க., பந்த் போராட்டம் நடத்தப்படும் தனித்தனியாக அறிவித்தன.
அதேபோல் அரசு ஆதரவு சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு, சமூக அமைப்பினரும் பந்த் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.
திட்டமிட்டப்படி நேற்று காலை 6:00 மணிக்கு பந்த் போராட்டம் துவங்கியது. சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பந்த் போராட்டத்தில் ஒவ்வொரு பகுதிகளில் இறந்த சிறுமியின் படம் வைத்து மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.
வணிக வளாகம்
நகர பகுதியில் பெரிய வணிக வளாகம் முதல் சிறிய பெட்டிக்கடை வரை அனைத்துமே மூடப்பட்டு இருந்தது. எப்போதும் பரப்பாக இருக்கும் முக்கிய வணிக வீதிகளான நேரு வீதி, காந்தி வீதி, அண்ணாசாலை, மறைமலையடிகள் சாலை, புஸ்சி வீதி, காமராஜர் வீதி, திருவள்ளுவர் சாலை, மிஷன் வீதிகளில் உள்ள அனைத்து கடைகளும் திறக்கப்படவில்லை.
மார்க்கெட்கள்
பெரிய மார்க்கெட் குபேர் மார்க்கெட், மீன் அங்காடி, நெல்லித் தோப்பு, முத்தியால்பேட்டை மார்க்கெட், செஞ்சி சாலை மார்க்கெட் அனைத்துமே மூடப்பட்டிருந்தது. சாலையோரம் இருக்கும் மீன்மார்க்கெட் அனைத்தும் மூடப்பட்டிருந்தன.
பஸ்கள்
பந்த் போராட்டம் காரணமாக புது பஸ்டாண்ட் வெறிச்சோடி காணப்பட்டது. புதுச்சேரியில் இருந்து சென்னை, காரைக்கால் என வெளியூர்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை. தமிழக பஸ்கள் புதுச்சேரி எல்லைப்பகுதிகளான கணகசெட்டிக்குளம், முள்ளோடை, கோரிமேடு, மதகடிப்பட்டு வரை மட்டுமே இயக்கப்பட்டன. பயணிகள் அங்கேயே இறக்கி விடப்பட்டனர்.
அங்கிருந்து புதுச்சேரிக்கு பயணிகள் நடந்தே வந்தனர். புதுச்சேரி உள்ளூர் வழித்தடங்களை பொருத்தவரை தனியார் பஸ்களே அதிகம். பந்த் போராட்டத்தினால் தனியார் பஸ்களும் இயக்கப்படவில்லை.
இதர வாகனங்கள்
டெம்போ, ஆட்டோக்களும் ஓடவில்லை. சிறுமி கொலையை கண்டிக்கும் வகையில் வணிகர்கள், பஸ் உரிமையாளர்கள், ஆட்டோ, டெம்போ சங்கத்தினர் தாங்களாகவே முன்வந்து ஆதரவும் தெரிவித்துள்ளனர்.
தேர்வு எழுதிய மாணவர்கள்
பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த கட்சிகள் தேர்வு நடப்பதால், பள்ளி கல்லுாரி பஸ்களை தடுத்து நிறுத்த மாட்டோம் என்று அறிவித்து இருந்தன.
இதனால் பள்ளி பஸ்கள், வாகனங்கள் இயக்கப்பட்டன. தேர்வு எழுதிய மாணவர்களை பெற்றோர் தங்களது பைக்குகளில் கொண்டு சென்றுவிட்டனர். அரசு பள்ளிகள் இயங்கினாலும் வருகை பதிவு குறைவாக இருந்தது.
தியேட்டர்கள்
பந்த் காரணமாக தியேட்டர்களில் பகல் காட்சிகள் அனைத்துமே ரத்து செய்யப்பட்டன. புதுச்சேரியில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலங்கள் வழக்கம்போல் இயங்கின. அரசு ஊழியர்கள் பணிக்கு வந்திருந்தனர்.
தொழிற்சாலைகள்
பந்த் போராட்டம் காரணமாக சேதராப்பட்டு, மேட்டுப்பாளையம், தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டைகளில் பெரும்பாலான தொழிற்சாலைகளும் மூடப்பட்டு இருந்தன.
சுற்றுலா பயணிகள் அவதி
புதுச்சேரிக்கு வந்திருந்த சுற்றுலா பயணிகள், மருத்துவமனை, அலுவலகங்களுக்கு செல்லும் மக்கள் பாதிக்கப்பட்டனர். பலரும் வெகுநேரம் காத்திருந்தும் பஸ்கள், ஆட்டோக்கள் இயங்காததால் அவதி அடைந்தனர். பந்த் போராட்டத்தில் அரசியல் கட்சிகள் மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக அனைத்து தரப்பினரும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றதால் புதுச்சேரியின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
1,000 போலீசார்
பந்த் போராட்டத்தையொட்டி நகர பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. நகர் முழுக்க 1000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மக்கள் அதிகம் கூடும் முக்கிய இடங்கள், புது பஸ்டாண்ட், ரயில் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முத்தியால்பேட் பகுதியில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.
காரைக்காலில்கடையடைப்பு
புதுச்சேரி சிறுமி மரணத்திற்கு நீதி கேட்டு, மாநில அரசை கண்டித்து, அனைத்து கட்சிகள் சார்பில், காரைக்கால் மாவட்டத்தில் கடையடைப்பு போராட்டம் நடந்தது. அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் ஓமலிங்கம் தலைமையில் போராட்டம் நடந்தது.
ஓரிரு அரசு மற்றும் தனியார் பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது. பாரதியார் சாலை, திருநள்ளார் சாலை, காமராஜர் சாலை, புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
புதிய பஸ் நிலையம் அருகே எம்.எல்.ஏ.,கள் நாஜிம், நாகதியாகராஜா ஆகியோர் முன்னிலையில் சாலைமறியல் போராட்டம் நடந்தது.
தகவல் அறிந்து வந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். எஸ்.பி., சுப்ரமணியன் தலைமையில் 50க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.