மதுக்கடத்தலை தடுக்க கலால் துறை கிடுக்கிப்பிடி:சட்டசபை தேர்தலை சந்திக்க ஆயத்தம்
மதுக்கடத்தலை தடுக்க கலால் துறை கிடுக்கிப்பிடி:சட்டசபை தேர்தலை சந்திக்க ஆயத்தம்
ADDED : பிப் 05, 2026 05:33 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் இருந்து பிற மாநிலங்களுக்கு மதுக்கடத்தலை தடுக்க ஆயத்த பணிகளை கலால் துறை முடுக்கிவிட்டுள்ளது. புதுச்சேரி சரக்கு என்று சொன்னாலே மற்ற மாநிலங்களில் உள்ள குடிமகன்களுக்கு ஒரே கிக் - ஏக்கம் தான். அண்டை மாநிலங்களில் எட்டாக் கனியாக இருக்கும் உயர் ரக மது வகைள், இங்கே பாமரனுக்கு எட்டும் துாரத்தில் இருப்பதே இதற்கு காரணம்.
உள்ளூர் சரக்கு மட்டும் அல்ல; உலகெங்கிலும் உள்ள பிராண்டு சரக்குகளை கூட கிண்ணத்தில் ஏந்தி போதையில் மிதக்கலாம். ஊர் திரும்பும்போதும் ஒரு பாட்டில் வாங்கி சென்று காட்டிவிடலாம் என்ற ஆசை உள்ளுக்குள் ஒலிப்பதை தடுக்கவே முடியாது.
இதனால் தான் சட்டசபை தேர்தலின்போது புதுச்சேரி சரக்குகளை சாலைவழி, கடல்வழி என எந்த வழி கிடைத்தாலும் நுாதனமாக கடத்தி சென்று வாக்காளர்களை குஷிப்படுத்துகின்றனர்.
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களுக்கு விரைவில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ள சூழ்நிலையில் புதுச்சேரி அரசு துறைகள் முழு வேகத்தில் சுழல துவங்கியுள்ளன.
அரசியல் கட்சிகள் வாக்காளர்களை அணுகும் உத்திகளை வகுத்துக் கொண்டிருக்க, அதே நேரத்தில் கலால் துறை தேர்தல் நேரத்தில் உருவாகும் முக்கிய சவால்களில் ஒன்றான மதுக் கடத்தலை தடுக்கும் முனைப்பில் களமிறங்கியுள்ளது.
கலால் சோதனைச்சாவடி மது கடத்தலை தடுக்க புதுச்சேரியில்-15, காரைக்கால்-10, ஏனாம்-10, மாகி-6 என, மாநிலம் முழுதும் 41 சோதனைசாடிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. புதுச்சேரி பிராந்தியத்தை பொருத்தவரை மதகடிப்பட்டு, திருக்கனுார், கோரிமேடு, அய்யங்குட்டிப்பாளையம், கனகசெட்டிக்குளம், தவளக்குப்பம், சோரியாங்குப்பம், மடுகரை, முள்ளோடை, சேதராப்பட்டு, உச்சிமேடு, குருவிநத்தம், மணமேடு, கரையாம்புத்துார், காமராஜர் மணி மண்டபம் உள்ளிட்ட 10 இடங்களில் இந்த தற்காலிக கலால் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கலால் சோதனைசாவடிகள் புதுச்சேரி மாநிலத்திற்குள் உள்ளே, வெளியே வரும் வாகனங்களை மடக்கி, பணம், மது, பரிசு பொருட்கள் வாக்காளர்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றா என கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட உள்ளது.
இந்த கலால் சோதனை சாவடிகளுக்கு மின்வசதி, இருக்கை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தவும், கண்காணிப்பு கேமிராக்கள் நிறுவுவதற்கான டெண்டர் பணிகளையும் கலாத் துறை முடுக்கிவிட்டுள்ளது. இதுமட்டுமின்றி கலால் பறக்கு படைகள் அமைப்பதற்கான பணிகளையும் இப்போதே துவங்கிவிட்டது. கடந்த 2021 சட்டசபை தேர்தலின்போது புதுச்சேரியில் 25 லட்சத்து 86 ஆயிரத்து 9 ரூபாய் மதிப்புள்ள 9,207 லிட்டர் மது பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
