/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு கட்டித் தருவதாக மோசடி :போலி பொறியாளர் கைது
/
வீடு கட்டித் தருவதாக மோசடி :போலி பொறியாளர் கைது
ADDED : அக் 09, 2025 11:25 PM

பாகூர்: பாகூர் அருகே வீடு கட்டி தருவதாக கூறி பணத்தை பெற்று, மோசடியில் ஈடுபட்ட போலி பொறியாளரை போலீசார் கைது செய்தனர்.
பாகூர் அடுத்த பின்னாச்சிகுப்பம் முத்தாலம்மன் நகரைச் சேர்ந்தவர் ஜேக்கப் வருண் பிரவீன், 42.
இவர் வீட்டின் மேல் மாடியில் வீடு கட்ட ஏற்பாடு செய்தார். இதனிடையே, பேஸ்புக்கில் வந்த கட்டுமான விளம்பரத்தை பார்த்து, வில்லியனுார் அடுத்த மணவெளி, திருக்காஞ்சி மெயின் ரோடு என்ற முகவரியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் அருள்ராஜ் 41; என்பவரிடம் 13 லட்சத்து 6 ஆயிரத்து 700 ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டார்.
கட்டுமான பணிகள் துவங்கிய நிலையில், அருள்ராஜ் கேட்டதன் பேரில் ஜேக்கப் வருண் பிரவீன், அவ்வப்போது பணம் கொடுத்து வந்தார்.
அதன் பின், கட்டுமான பணிகள் சரிவர நடக்கவில்லை.
இதையடுத்து, ஜேக்கப் வருண் பிரவீன், மொபைல் மூலம் அருள்ராஜை தொடர்பு கொண்டு கட்டுமானம் குறித்து கேட்டபோது, சரியான பதில் இல்லை. இதனால், அவர், மணவெளியில் உள்ள அலுவலகத்திற்கு சென்று பார்த்த போது, அந்த முகவரியில் அப்படி ஒரு கட்டுமான நிறுவனம் எதுவும் இயங்கவில்லை என்பதும், அது போலியான முகவரி என்பதும் தெரியவந்தது.
இது குறித்து ஜேக்கப் வருண் பிரவீன், வீடு கட்டுமான பணியை முடிக்காமல், 7 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக அருள்ராஜ் மீது,பாகூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன்பேரில், சப் இன்ஸ்பெக்டர் நந்தக்குமார், வழக்குப் பதிந்து, அருள்ராஜை தேடி வந்தனர். இதனிடையே, சோரியாங்குப்பத்தை சேர்ந்த அமுதா என்பவரிடம், அருள்ராஜ் வீடு கட்டி தருவதாக கூறி, ஒப்பந்தம் போட்டு, 15 லட்ச ரூபாயை பணத்தை பெற்று கொண்டு, வீட்டை கட்டி முடிக்காமல் மோசடி செய்ததாக மற்றொரு புகாரும் போலீசாருக்கு வந்தது.
இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் பதுங்கி இருந்த அருள்ராஜை பாகூர் போலீசார் நேற்று பிடித்து விசாரித்தனர். அருள்ராஜ், பத்துக்கண்ணு அடுத்த கூனிமுடக்கு பகுதியை சேர்ந்தவர் என்பதும், எம்.பி.ஏ., பட்டதாரியான இவர், பொறியாளர் என கூறி, வீடு கட்டி தருவதாக பணம் பெற்று, வீடுகளை கட்டி முடிக்காமல் மோசடி செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார், அவரை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைத்தனர்.