/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஒரிஜினலுடன் போலி மருந்து கலப்பு அம்பலம் புதுச்சேரியில் நேற்றைய சோதனையில் 'பகீர்'
/
ஒரிஜினலுடன் போலி மருந்து கலப்பு அம்பலம் புதுச்சேரியில் நேற்றைய சோதனையில் 'பகீர்'
ஒரிஜினலுடன் போலி மருந்து கலப்பு அம்பலம் புதுச்சேரியில் நேற்றைய சோதனையில் 'பகீர்'
ஒரிஜினலுடன் போலி மருந்து கலப்பு அம்பலம் புதுச்சேரியில் நேற்றைய சோதனையில் 'பகீர்'
ADDED : டிச 04, 2025 05:52 AM

புதுச்சேரி: சி.பி.சி.ஐ.டி., போலீசார் மற்றும் மருந்து தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் நேற்று இரு இடங்களில் நடந்த அதிரடி சோதனையில் 1க்கு 4 சதவீதம் போலி மருந்து கலந்திருப்பது அதிர்ச்சி தகவல் அம்பலமாகியுள்ளது. இச்சம்பவம் ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களையும் பெரும் அதிர்ச்சிக் குள்ளாக்கி உள்ளது.
புதுச்சேரியில் தங்கள் நிறுவனம் பெயரில் போலி மருந்து தயாரிப்பதாக 'சன் பார்மா' நிறுவனம் கடந்த மாதம் சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தது.
அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். அதில், மதுரையை சேர்ந்த ராஜா என்பவர், 'சன் பார்மா' நிறுவனத்தின் புதுச்சேரிக்கான வினியோகஸ்தர் உரிமையை பெற்று, அந்த கம்பெனி தயாரிக்கும் 36 வகையான மருந்துகளை போலியாக தயாரித்து, ஒரிஜினல் மருந்துகளுடன் கலந்து விற்பனை செய்தது தெரியவந்தது.
அதன்பேரில், ராஜாவுடன் இருந்த ராணா மற்றும் மெய்யப்பன் ஆகியோரை கைது செய்தனர். தலைமறைவான ராஜாவை தேடி வருகின்றனர். மேலும், ராஜா போலி மருந்துகளை பதுக்கி வைத்திருந்த குருமாம்பேட் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்த மூன்று குடோன்கள் மற்றும் திருபுவனை பாளையத்தில் போலி மருந்து தயாரித்த தொழிற்சாலையை சோதனை நடத்தி 'சீல்' வைத்தனர்.
விசாரணையில் இந்த போலி மருந்து விவகாரத்தில் மேலும் 7 வியாபார நிறுவனங்களில் சோதனை நடத்த கோர்ட்டில் அனுமதி பெற்றனர்.
அதன்பேரில் நேற்று காலை சி.பி.சி.ஐ.டி., இன்ஸ்பெக்டர் பாபுஜி தலைமையில் மருந்து தரக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் தேவகிரி, கீர்த்தனா அடங்கிய குழுவினர், புதுச்சேரி செட்டி தெருவில் உள்ள 'சன் பார்மா' ஏஜென்சியில் சோதனை மேற்கொண்டனர்.
அதில், ஒரு ஒரிஜினல் மருந்திற்கு 4 போலி மருந்து என்ற விகிதத்தில் 36 வகையான மருந்துகள் பல கோடி ரூபாய்க்கு பதுக்கி வைத்திருப்பதை கண்டுபிடித்தனர். விசாரணையில், இங்கிருந்து அனைத்து மெடிக்கல்களுக்கும் மருந்து விற்பனை செய்திருப்பது தெரியவந்தது. அங்கிருந்த மருந்துகளின் மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், புதுச்சேரியில் உள்ள அனைத்து மருந்தகங்களிலும் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
மேலும், போலி மருந்துகளை 'பார்கோடிங்' சோதனை மூலம் எளிதாக கண்டுபிடிக்க மத்திய மருந்து கட்டுப்பாட்டு துறையின் உதவியை நாட முடிவு செய்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து மாலை 4:00 மணிக்கு பூரணாங்குப்பத்தில் ஒரு வீட்டில் இயங்கி வந்த போலி மருந்து தொழிற்சாலையும், இடையார்பாளையத்தில் உள்ள குடோனில் சோதனை மேற்கொண்டனர். அங்கும் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போலி மருந்துகள் மற்றும் மூலப் பொருட்கள், இயந்திரங்கள் இருந்ததை கண்டுபிடித்து, அதனை பறிமுதல் செய்து 'சீல்'வைத்தனர்.
நேற்று 'சன் பார்மா'ஏஜென்சியில் நடந்த அதிரடி சோதனையில், 1க்கு 4 சதவீத போலி மருந்து இருந்த சம்பவம் ஒட்டுமொத்த புதுச்சேரி மக்களையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

