உயர்த்தப்பட்ட பயிர் மானிய ஊக்க தொகை கவர்னருக்கு விவசாய சங்கம் மனு
உயர்த்தப்பட்ட பயிர் மானிய ஊக்க தொகை கவர்னருக்கு விவசாய சங்கம் மனு
ADDED : ஜன 30, 2026 05:16 AM
புதுச்சேரி: உயர்த்தப்பட்ட பயிர் மானிய ஊக்கத் தொகையை வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து பங்காரு வாய்க்கால் நீராதார கூட்டமைப்பின் தலைவர் சந்திரசேகர், கவர்னருக்கு அனுப்பியுள்ள மனு:
புதுச்சேரி அரசு, 2025-2026ம் நிதி ஆண்டிற்கான பயிர் மானிய ஊக்கத்தொகையை ஏக்கருக்கு ரூ. 5,000-லிருந்து ரூ. 6,000 ஆக உயர்த்தி அறிவித்தது. இது, விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இருப்பினும், நடப்பு நிதியாண்டு முடியவுள்ள நிலையிலும், உயர்த்தி அறிவித்த ஊக்கத்தொகை இதுவரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் சென்றடையவில்லை.
இடுபொருள் செலவுகள் அதிகரித்துள்ள நிலையில், இந்த தாமதம் விவசாயிகளுக்குப் பெரும் நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், தற்போதைய சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீட்டுத் திட்டம் இதுவரை பதிவு செய்யவில்லை . இயற்கைச் சீற்றங்கள் மற்றும் எதிர்பாராத கால நிலை மாற்றங்களால் பயிர்கள் சேதமடையும் அபாயம் உள்ள நிலையில், காப்பீடு செய்யாதது விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இப்பிரச்னையில் தாங்கள் தலையிட்டு, உயர்த்தப்பட்ட பயிர் மானிய ஊக்கத்தொகையான ரூ. 6,000-ஐ விவசாயிகளுக்கு விரைந்து வழங்கவும், சம்பா பருவத்திற்கான பயிர் காப்பீட்டுப் பதிவை உடனடியாகத் தொடங்கிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
