/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகள் கடன் ரூ. 2 கோடி தள்ளுபடி
/
விவசாயிகள் கடன் ரூ. 2 கோடி தள்ளுபடி
ADDED : அக் 30, 2024 04:22 AM
புதுச்சேரி : பிரதம கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன் தொகையில் ரூ. 2 கோடி முதல் தவணையாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பு:
புதுச்சேரியில் கடந்த 2021-22ம் ஆண்டு பட்ஜெட் கூட்டத் தொடரில் பிரதம கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த நடவடிக்கைகளுக்காக விவசாய உறுப்பினர்கள் பெற்ற 31.3.2022ம் தேதி வரையிலான காலத்திற்கு திருப்பி செலுத்தப்படாமல் உள்ள அசல், வட்டி மற்றும் அபராத வட்டி அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.
அதன்படி, பிரதம கூட்டுறவு விவசாய கடன் சங்கங்களில் 1,579 சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தொகை ரூ.11.61 கோடி தள்ளுபடி செய்யப்பட்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
இந்த தொகையில் முதல் தவணையாக ரூ.2 கோடி வழங்கப் பட்டுள்ளது. மேற்படி, மீதி தொகையான ரூ.9.61 கோடி இரண்டு தவணைகளில் புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கிக்கு வழங்கப்படும். அனைத்து பிரதம கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி உடனடியாக விவசாயிகளின் கடன் கணக்குகளை நேர்செய்து புதிய விவசாய கடன் வழங்க அறிவுறுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற்ற உறுப்பினர்களுக்கான தள்ளுபடி கடிதம் தீபாவளிக்கு பிறகு நடக்கும் அரசு விழாவில் கவர்னர், முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முன்னிலையில் வழங்கப்படும். இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.