சூறைகாற்றில் விழுந்த டிரான்ஸ்பார்மர்: சீரமைக்காததால் விவசாயிகள் அவதி
சூறைகாற்றில் விழுந்த டிரான்ஸ்பார்மர்: சீரமைக்காததால் விவசாயிகள் அவதி
ADDED : ஏப் 14, 2026 09:01 PM

புதுச்சேரி: செட்டிப்பட்டு நாவற்குளம் பகுதியில் சூறைக்காற்றில் விழுந்த டிரான்ஸ்பார்மரை சீரமைக்காததால் விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு நாவற்குளம் பகுதியை சுற்றியும் விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கரும்பு, நெல் உள்ளிட்டவைகளை சாகுபடி செய்து வருகின்றனர். இவர்கள் விவசாய பாசனத்திற்காக மின்மோட்டார்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அப்பகுதி விவசாயிகளின் நலன்கருதி திருக்கனுார் மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தின் மூலம் நாவற்குளம் கரையில் டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டு, விவசாய மோட்டார்களுக்கு மின் விநியோகம் வழங்கப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் வீசிய சூறைகாற்றுடன் கூடிய கனமழையால், டிரான்ஸ்பார்மர் சேதமடைந்து உடைந்து விழுந்தது.
இதனால், அப்பகுதி விவசாய மின் மோட்டார்களுக்கு மின்சாரம் வழங்க தற்காலிகமாக அருகிலுள்ள டிரான்ஸ்பார்மர் மூலம் மின் விநியோகம் செய்யப்பட்டது. ஆனால், டிரான்ஸ்பார்மர் உடைந்து விழுந்து 7 மாதங்களுக்கு மேலாகியும் இதுவரையில் சீரமைக்கப்படவில்லை. மேலும், புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கவும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இதனால், அப்பகுதியில் உள்ள மின்மோட்டார்களுக்கு, போதிய மின்சாரம் கிடைக்காமல் மின் பற்றாக்குறை ஏற்பட்டு, அடிக்கடி பழுதாகி வருகின்றன. இதுகுறித்து மின்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், அப்பகுதி விவசாயிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, சூறைகாற்றில் விழுத்த டிரான்ஸ்பார்மரை விரைந்து சீரமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
