காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் கவலை
காட்டுப்பன்றிகள் பயிர்களை சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் கவலை
ADDED : ஏப் 23, 2026 11:35 PM
புதுச்சேரி: கூனிச்சம்பட்டு, செட்டிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புறங்களில் விவசாய பயிர்களை காட்டுப்பன்றிகள் கூட்டம் சேதப்படுத்தி வருவதால், விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
திருக்கனுார் அடுத்த செட்டிப்பட்டு, கூனிச்சம்பட்டு, மணலிப்பட்டு, பி.எஸ்.பாளையம், மண்ணாடிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், தங்களது விவசாய நிலங்களில் நெல், கரும்பு, மரவள்ளி கிழங்கு, மணிலா உள்ளிட்டவைகளை பயிர் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்து வரும் காட்டுப் பன்றிகள் விவசாயிகள் பயிர் செய்துள்ள விளை நிலங்களுக்கு இரவு நேரங்களில் கூட்டம், கூட்டமாக வந்து, அனைத்து பயிர்களையும் சேதப்படுத்தி விட்டு சென்று விடுகின்றன.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளிடம் பலமுறை தெரிவித்தும் இதுவரையில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.இதையடுத்து, காட்டு பன்றிகளின் நடமாட்டத்தை தடுக்க விவசாயிகள், இரவு நேரங்களில் ஒலி பெருக்கிகள் மூலம் பல்வேறு விலங்குகளின் குரலில் சத்தம் எழுப்பியும், வெடிகள் வெடித்தும் வருகின்றனர்.
இருப்பினும், காட்டுபன்றிகள் இரவு நேரங்களில் கூட்டமாக வந்து, விவசாய பயிர்களை மிதித்து சேதப்படுத்தி விட்டு செல்வது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதனால், விவசாயிகள் தற்போது செய்து அறியாமல் திகைத்து வருகின்றனர்.
எனவே, காட்டுபன்றிகளை விரட்டவும், வனவிலங்குகள் மூலம் சேதப்படுத்தப்படும் விவசாய நிலங்களுக்கு அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
