/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'கெத்து' காட்டும் ஆசாமிகளின் நாய்களால் அச்சம்! ஏர்போர்ட் சாலையில் பொதுமக்கள் திக்... திக்...
/
'கெத்து' காட்டும் ஆசாமிகளின் நாய்களால் அச்சம்! ஏர்போர்ட் சாலையில் பொதுமக்கள் திக்... திக்...
'கெத்து' காட்டும் ஆசாமிகளின் நாய்களால் அச்சம்! ஏர்போர்ட் சாலையில் பொதுமக்கள் திக்... திக்...
'கெத்து' காட்டும் ஆசாமிகளின் நாய்களால் அச்சம்! ஏர்போர்ட் சாலையில் பொதுமக்கள் திக்... திக்...
ADDED : மே 08, 2024 03:55 AM

புதுச்சேரி: 'கெத்து' காட்டுவதற்காக வருகின்ற ஆசாமிகளின் நாய்களால், லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் வாக்கிங் செல்பவர்கள் திகில் அடைந்துள்ளனர்.
சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்
சென்னை நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை மாநகராட்சி பூங்காவில், கடந்த 5ம் தேதி மாலை விளையாடி கொண்டிருந்த 5 வயது சிறுமி சுரக் ஷாவை, வாக்கிங் செல்வதற்காக பூங்காவிற்கு வந்த புகழேந்தி என்பவர் அழைத்து வந்திருந்த 'ராட்வெய்லர்' நாய்கள் கடித்து குதறின.
இதில், சிறுமியின் உடல் முழுதும் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. தலை முடியோடு சேர்ந்து மண்டை ஓட்டு தோல் பிய்ந்து தொங்கியது. காப்பாற்ற வந்த சிறுமியின் தாய் சோனியாவையும் நாய்கள் கடித்தன.
பொதுமக்கள் அதிர்ச்சி
அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து நீண்ட நேரம் போராடி, நாய்களை விரட்டி அடித்தனர். சிறுமி தற்போது தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
நகராட்சியிடம் உரிமம் பெறாமல் 'ராட்வெய்லர்' நாய்களை வளர்த்த புகழேந்தி, அவரது மனைவி, மகனை போலீசார் கைது செய்தனர். மேலும், இவர்களுக்கு மாநகராட்சி சார்பில் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
பூங்காவில் விளையாடிய சிறுமியை நாய்கள் கடித்து குதறிய சம்பவம், தமிழகம் முழுவதும் மட்டுமல்லாமல் புதுச்சேரியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முன்னெச்சரிக்கை தேவை
இதுபோன்ற சம்பவங்கள் புதுச்சேரியில் நடப்பதற்கு முன்பாக அரசு விழித்து கொள்ள வேண்டும். ஏற்கனவே, புதுச்சேரி முழுதும் பெருகி வருகின்ற தெரு நாய்களால் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயில் காரணமாக வெறி பிடித்த நாய்கள், மக்களை கடிக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி வருகின்றன.
இதுபோன்ற சூழ்நிலையில், அதீத ஆக்ரோஷம் கொண்ட ராட்வெய்லர், பிட்புல், டெர்ரியர், புல்டாக் உல்ப் உள்ளிட்ட வெளிநாட்டு நாய்களை புதுச்சேரியில் வளர்க்கும் பலரும், தங்களது நாய்களுக்கு நகராட்சியில் உரிமம் பெறுவதில்லை.
கடற்கரை சாலை, வொயிட் டவுன் பகுதியில் உள்ள வீதிகள், லாஸ் பேட்டை ஏர்போர்ட் சாலை, ெஹலிபேட் மைதானம் உள்ளிட்ட இடங்களில் வாக்கிங் செல்பவர்கள் ஆக்ரோஷம் அதிகமுள்ள ஆபத்தான நாய்களை தங்களுடன் அழைத்து வருகின்றனர். அவ்வாறு வாக்கிங் செல்பவர்களுடன் வருகின்ற நாய்கள், பொதுமக்களை விரட்டி விரட்டி கடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
லாஸ்பேட்டையில் அபாயம்
குறிப்பாக, லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் வாக்கிங் செல்லும் பலர் 'கெத்து' காட்டுவதற்காக காரில் நாய்களை அழைத்து வருகின்றனர். காரில் இருந்து இறங்கியவுடன், நாய் சங்கிலியை கழற்றிவிட்டு சாலையில் கண்டபடி திரியவிட்டு வாக்கிங் செல்கின்றனர்.
சங்கிலி கழற்றப்பட்ட நாய், சாலையில் திரியும் தெரு நாய்களுடன் ஆவேசமாக குலைத்து சண்டையிடுகின்றன. மேலும், வாக்கிங் செல்லும் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கர்ண கொடூரமாக குலைக்கின்றன; பல நேரங்களில் துரத்தி கடிக்க முயல்கின்றன.
இதுபோன்ற 'கெத்து' காட்டும் ஆசாமிகளால், லாஸ்பேட்டை ஏர்போர்ட் சாலையில் அப்பாவி பொதுமக்கள் வாக்கிங் செல் லவே அச்சப்படுகின்றனர். நாயுடன் வாக்கிங் வரும் 'கெத்து' ஆசாமிகள், நாய் சங்கிலியை கழற்றி விடாமல், கையில் பிடித்து கொண்டு செல்ல வேண்டும். நாயின் வாயை மூடும் முககவசம் அணிவித்து அழைத்து செல்ல வேண்டும்.
மேலும், நகராட்சியிடம் முறைப்படி உரிமம் பெற வேண்டும். கால்நடை மருத்துவரிடம் காண்பித்து முறையாக தடுப்பு ஊசிகள் போட வேண்டும்.
விபரீதம் நடக்கும் முன்...
எதை பற்றியும் கவலைப் படாத 'கெத்து' காட்டும் ஆசாமிகளின் நாய்கள் செய்யும் அட்டூழியம் ஏர்போர்ட் சாலையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய உழவர்கரை நகராட்சி அதிகாரிகளோ லாஸ்பேட்டை பக்கமே தலைகாட்டுவதில்லை.
சென்னையில் சிறுமிக்கு நேர்ந்ததை போன்ற கொடூர சம்பவம் புதுச்சேரியில் நடப்பதற்கு முன்பாக, உழவர்கரை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கையில் இறங்க வேண்டும்.

