வங்கி ஊழியர்களின் பிரச்னையை தீர்க்க கோரி வைத்திலிங்கத்திடம் சம்மேளன நிர்வாகிகள் மனு
வங்கி ஊழியர்களின் பிரச்னையை தீர்க்க கோரி வைத்திலிங்கத்திடம் சம்மேளன நிர்வாகிகள் மனு
ADDED : மே 15, 2026 03:36 AM

புதுச்சேரி: வங்கி ஊழியர்களின் பிரச்னைகளை மத்திய நிதி அமைச்கத்திடம் பேசி தீர்க்க வேண்டும் என, வைத்திலிங்கம் எம்.பி.,யை சந்தித்து அகில இந்திய பாரத வங்கி ஊழியர் சம்மேளன சங்கத்தினர் மனு அளித்தனர்.
மனுவில், வங்கி ஊழியர் சம்மேளனம் கடந்த 67 ஆண்டுகளாக நிர்வாகத்துடன் சுமூகமான உறவைப் பேணி வந்த போதிலும், தற்போது ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சட்டப்பூர்வ ஒப்பந்தங்கள் மீறப்படுவதால் பெரும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.
கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் ஊழியர்கள் அகில இந்திய அளவில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
கடந்த 29 ஆண்டுகளாக மெசஞ்சர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. 2022-க்குப் பிறகு ஆயுதமேந்திய பாதுகாவலர்கள் நியமனம் இல்லை. இது வங்கியின் பாதுகாப்பு மற்றும் அடி த்தட்டு மக்களின் வேலைவாய்ப்பை பாதிக்கிறது.
வங்கியின் நிரந்தரப் பணிகளை ஒப்பந்த அடிப்படையில் அயலக பணிக்கு விடுவது இருதரப்பு ஒப்பந்தங்களுக்கு எதிரானது.
மத்திய அரசின் வழிகாட்டுதல்கள் இருந்தபோதிலும், என்.பி.எஸ்., திட்டத்தில் உள்ள ஊழியர்களுக்கான உரிமை மறுக்கப்பட்டு வருகிறது.
இதனால் 1,10,000 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் நிதி இழப்பைச் சந்திக்கின்றனர். 2019ம் ஆண்டுக்கு பிறகு பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு, வட்டங்களுக்கு இடையிலான இடமாற்றம் ஒரு தலைப்பட்சமாக நிறுத்தப்பட்டுள்ளது.
எனவே, மத்திய நிதி அமைச்சர் மற்றும் நிதித்துறை அமைச்சகம், வங்கி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி இப்பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
