/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தவறான சிகிச்சையால் பெண் இறப்பு: உறவினர்கள் மறியல்
/
தவறான சிகிச்சையால் பெண் இறப்பு: உறவினர்கள் மறியல்
ADDED : நவ 09, 2024 08:33 AM
புதுச்சேரி : கருத்தரிப்பு மையத்தில் அளித்த தவறான சிகிச்சையால் பெண் இறந்ததாக கூறி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், விழுப்புரம்-புதுச்சேரி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தரணி,38; இவரது மனைவி நதியா,34; இவர்களுக்கு குழந்தை இல்லை. அதனால், கடந்த 2 மாதங்களுக்கு முன் நதியா, புதுச்சேரி ரெட்டியார்பாளையத்தில் உள்ள தனியார் கருத்தரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்றார். அதன் தொடர்ச்சியாக, கடந்த 5ம் தேதி பரிசோதனைக்காக வந்துள்ளார். அங்கு சிகிச்சை பெற்று வந்த நதியாவிற்கு திடீரென உடல் நிலை மோசமானதால், அவரை ஜிப்மர் மருத்துவமைனக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நதியா நேற்று இறந்தார்.
கருத்தரிப்பு மையத்தில் அளித்த தவறான சிகிச்சையால், நதியா இறந்ததாக கூறி தரணி மற்றும் அவரது உறவினர்கள் நேற்று இரவு 10;00 மணிக்கு, ரெட்டியார்பாளையத்தில், விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த ரெட்டியார்பாளையம் சப் இன்ஸ்பெக்டர் கலையரசன் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பிரேத பரிசோதனை அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதனையேற்று மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.