ADDED : மார் 10, 2024 05:02 AM
புதுச்சேரி, : பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு, முதல்கட்ட நிவாரண தொகை ரூ. 7.12 லட்சத்திற்கான ஆணை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரியைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். முதல்வர் பரிந்துரைப்படி, சிறுமியின் குடும்பத்திற்கு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், இறப்புக்கான முதல் தவணையில் 50 சதவீத நிதி 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் மற்றும் மாநில அரசின் கூடுதல் நிவாரண தொகை 3 லட்சம் என, மொத்தம் 7 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் நிதிக்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் நடந்தது.
முதல்வர் ரங்கசாமி முதல் தவணை தொகைக்கான ஆணையை சிறுமியின் பெற்றோரிடம் வழங்கினார்.
இரண்டாம் தவணை தொகை 4 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்பு வழங்கப்படும் எனவும், எதிர்பாராத மரணம் ஏற்பட்டால் வழங்கும் 10 லட்சம் ரூபாய் நாளை (11ம் தேதி) பெற்றோர் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இதன் மூலம் சிறுமியின் பெற்றோருக்கு 17 லட்சத்து 12 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுதவிர ஏற்கனவே அறிவித்தபடி, முதல்வர் நிவாரண நிதியில் இருந்து 20 லட்சம் விரைவில் வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம்,அமைச்சர் லட்சுமிநாராயணன், பிரகாஷ்குமார் எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன் கலந்து கொண்டனர்.
