புதுச்சேரியில் ஏப்., 15 முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்குகிறது
புதுச்சேரியில் ஏப்., 15 முதல் மீன்பிடி தடைக்காலம் துவங்குகிறது
ADDED : ஏப் 12, 2026 08:01 PM
புதுச்சேரி: கடல் வளத்தைப் பாதுகாக்க ஆண்டுதோறும் கடைபிடிக்கப்படும் மீன்பிடி தடைக்காலம் புதுச்சேரியில் வரும் 15ம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த மீன்பிடி தடைக்காலத்தையொட்டி, மத்திய அரசின் உத்தரவுப்படி, ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலும், காரைக்காலில் மண்டபத்துார் முதல் வாஞ்சூர் வரையிலும் உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும். ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வரும் படகுகள் அனைத்தும், நாளை ஏப்., 14ம் தேதி நள்ளிரவு 12:00 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என, மீன்வளத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. விதிகளை மீறிக் கடலுக்குச் செல்லும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
படகு பராமரிப்பு
புதுச்சேரியின் 18 மீனவ கிராமங்களைச் சேர்ந்த நுாற்றுக்கணக்கான விசைப்படகுகள் ஒவ்வொன்றாக கரை திரும்பத் துவங்கியுள்ளன. அடுத்த இரண்டு மாதங்களுக்கு வேலை இருக்காது என்பதால், இந்த தடைகாலத்தைப் படகுகளைச் சீரமைக்கவும், வலைகளைப் பழுதுபார்க்கவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர். தேய்மானம் அடைந்த இஞ்சின்கள் மற்றும் வர்ணம் மங்கிய படகுகள் இனி புதுப்பொலிவு பெறத் துவங்கும்.
மீன் கடைகளில் கூட்டம்
மீன்பிடி தடைக்காலம் தொடங்கினால் மீன்களின் விலை கிடுகிடுவென உயரும் என்பதால், அசைவப் பிரியர்கள் இப்போதே மீன் சந்தைகளில் குவியத் துவங்கியுள்ளனர். ஞாயிற்றுகிழமையான நேஅனைத்து மீன் கடைகளிலும் கூட்டம் அலை மோதியது.
தேர்தல் பணப் புழக்கம், தடைக்காலம் வரப்போகிறது என்ற எண்ணமும் சேர்ந்து, மீன்களின் விலை அதிகமாக இருந்தாலும் மக்கள் போட்டிப்போட்டுக் கொண்டு மீன்களை வாங்கிச் சென்றதை காண முடிந்தது. இனி வரும் 61 நாட்களுக்குப் பெரிய விசைப்படகுகள் முடங்குவதால், சிறிய பைபர் படகுகள் மூலம் கொண்டு வரப்படும் மீன்களே சந்தைக்கு வரும். இதனால் மீன் விலை இனிவரும் நாட்களில் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
