ADDED : ஏப் 15, 2026 10:26 PM

புதுச்சேரியில்: புதுச்சேரியில் மீன்பிடி தடைக்காலம் துவங்கியுள்ளதால், மீனவர்கள் விசைப்படகுகளை கரைகளை நிறுத்தி வைத்துள்ளார்.
கடல் வளத்தைப் பாதுகாக்க ஆண்டுதோறும் கடை பிடிக்கப்படும் மீன்பிடி தடைக்காலம் புதுச்சேரியில் துவங்கியது. இதையொட்டி, மத்திய அரசின் உத்தரவுப்படி, நேற்று முதல் ஜூன் 14ம் தேதி வரை மொத்தம் 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகள் கடலுக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியின் கனகசெட்டிக்குளம் முதல் மூர்த்திக்குப்பம் வரையிலும், காரைக்காலில் மண்டபத்துார் முதல் வாஞ்சூர் வரையிலும் உள்ள அனைத்து மீனவ கிராமங்களுக்கும் இந்தத் தடை பொருந்தும்.
ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்து வரும் படகுகள் அனைத்தும், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்குள் கரை திரும்ப வேண்டும் என, மீன்வளத்துறை அதிரடி உத்தரவு பிறப்பித்தது. விதிகளை மீறிக் கடலுக்குச் செல்லும் படகுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரண்டு மாதங்களுக்கு வேலை இருக்காது என்பதால், இந்த தடைகாலத்தில் மீனவர்கள் படகுகளைச் சீரமைக்கவும், வலைகளைப் பழுது பார்க்கும் பணிகளில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். தேய்மானம் அடைந்த இஞ்ஜின்கள் மற்றும் வர்ணம் மங்கிய படகுகள் இனி புதுப்பொலிவு பெறத் துவங்கும்.
மீன்பிடி தடைக்காலம் துவங்கியுள்ளதால், 61 நாட்களுக்குப் பெரிய விசைப்படகுகள் முடங்குவதால், சிறிய பைபர் படகுகள் மூலம் கொண்டு வரப்படும் மீன்களே சந்தைக்கு வரும். இதனால் மீன் விலை இனிவரும் நாட்களில் உச்சம் தொடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
