/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஊர்க்காவல் வீரர் பணிக்கு பிப்.1ம் தேதி உடற்தகுதி தேர்வு: 500 பணியிடங்களுக்கு 20,154 பேர் போட்டி
/
ஊர்க்காவல் வீரர் பணிக்கு பிப்.1ம் தேதி உடற்தகுதி தேர்வு: 500 பணியிடங்களுக்கு 20,154 பேர் போட்டி
ஊர்க்காவல் வீரர் பணிக்கு பிப்.1ம் தேதி உடற்தகுதி தேர்வு: 500 பணியிடங்களுக்கு 20,154 பேர் போட்டி
ஊர்க்காவல் வீரர் பணிக்கு பிப்.1ம் தேதி உடற்தகுதி தேர்வு: 500 பணியிடங்களுக்கு 20,154 பேர் போட்டி
ADDED : ஜன 12, 2024 03:39 AM

புதுச்சேரி அரசு துறைகளில் 10 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றில் முதற்கட்டமாக ஏற்கனவே 1200 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. இரண்டாம் கட்டமாக மீதமுள்ள அரசு பணியிடங்களுக்கு அடுத்தடுத்து அறிவிப்பு வெளியாக உள்ளது.
இது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:
புதுச்சேரி காவல் துறையில் ஏற்கனவே முதற்கட்டமாக 390 காவலர்கள் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.இரண்டாம் கட்டமாக 353 பேர் பணி அமர்த்தப்பட்டு தற்போது பயிற்சியில் உள்ளனர். விரைவில் அவர்களுக்கு மக்கள் பணி வழங்கப்படும். வரும் 14ம் தேதி 24 டிரைவர்கள் 31 காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள் என மொத்தம் 55 பேருக்கு பணி ஆணை வழங்கப்படும்.
அதேபோல் அறிவிப்பு வெளியான 500 ஊர்க்காவல் படை வீரர்கள் தேர்வுக்கு 20,154 விண்ணப்பங்கள் பெறப்பட்டு பரிசீலனை செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கு வரும் பிப்ரவரி 1ம் தேதி உடற் தகுதி தேர்வு நடைபெற உள்ளது.
காவல் துறை
இந்த அரசு பொறுப்பேற்றதிலிருந்து காவல் துறையில் உள்ள காலி பணியிடங்கள் தகுதி அடிப்படையில், நேர்மையான முறையில் நிரப்பப்பட்டு, அவர்களுக்கு பணியிடங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதேபோல் டெக்ஹாண்டலர்ஸ், 61 சப் -இன்ஸ்பெக்டர்கள், 200 கடலோர ஊர்க்காவல் படை வீரர் பணியிடங்களை நிரப்ப நிர்வாக ஒப்புதல் பெற்றப்பட்டு விரைவில் நிரப்பப்படும்.
ஆரம்பபள்ளி ஆசிரியர்:
கல்வித்துறையில் ஏற்கனவே பி.எஸ்.டி., ஆசிரியர் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் பெற்று, அது ஆய்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டிருகிறது. நீதிமன்றத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். நீதிமன்ற ஒப்புதல் பெறப்பட்டு தகுதியானவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
பட்டதாரி ஆசிரியர்:
வரும் 13ம் தேதி பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 286 பேர், விரிவுரையாளர் 67 பேர் நிரப்புவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்படுகிறது. பயிற்சி பெற்ற பட்டதாரி மொழிப்பாடம் ஆசிரியர் 40 பணியிடங்கள் நிரப்புவதற்கான கோப்பு ஒப்புதலுக்காக கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
லேப்டாப்:
மாணவர்களுக்கான இலவச லேப்டாப் வழங்குவதற்கான கோப்பும் கவர்னருக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெகு விரைவில் ஒப்புதல் பெறப்பட்டு அவை பயன்பாட்டுக்கு வர இருக்கின்றது.
மின் துறை காலியிடங்கள்:
மின்துறையில் 177 கன்ஸ்ரக் ஷன் ஹெல்பர் பணியிடங்களை நிரப்புவதற்கு நிதித்துறைக்கு ஒப்புதலுக்காக கோப்பு அனுப்பப்பட்டுள்ளது. விரைவில் அந்த பணியிடங்கள் நடவடிக்கை எடுக்கப்படும். 103 இளநிலை பொறியாளர் தேர்வு செய்வதற்கு அரசின் ஒப்புதல் பெற கோப்பு தயார் செய்து அனுப்பப்பட்டுள்ளது.மேலும் துறையில் இருக்கின்ற அத்தனை காலி பணியிடங்களும் நிரப்புவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசின் காலிப்பணியிடங்கள் தகுதியான இளைஞர்களை கொண்டு நிரப்பப்பட்டு, விரைவாக மக்கள் சேவை செய்கின்ற நிலையில் இந்த அரசு உள்ளது.
புதுச்சேரியில் தொழில் செய்ய நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன.குறிப்பாக பிரெஞ்சு நிறுவனங்கள் இடம் கேட்டுள்ளன. செமி கண்டக்டர்கள் கம்பெனிகள் இடம் கேட்டுள்ளன.
13 மாத சம்பளம்:
நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்யும் காவலர்களுக்கு 13 மாதமாக சம்பளம் வழங்கப்படுகின்றது. இந்த சம்பளம் காவலர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.