/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கடலுார், விழுப்புரத்தில் நீரில் மூழ்கி 5 பேர் பலி சிறுமியை தேடும் பணி தீவிரம்
/
கடலுார், விழுப்புரத்தில் நீரில் மூழ்கி 5 பேர் பலி சிறுமியை தேடும் பணி தீவிரம்
கடலுார், விழுப்புரத்தில் நீரில் மூழ்கி 5 பேர் பலி சிறுமியை தேடும் பணி தீவிரம்
கடலுார், விழுப்புரத்தில் நீரில் மூழ்கி 5 பேர் பலி சிறுமியை தேடும் பணி தீவிரம்
ADDED : டிச 16, 2024 04:36 AM

வானுார் கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் வெவ்வேறு இடங்களில் தண்ணீரில் மூழ்கி, பள்ளி மாணவ மாணவியர் மூவர் உட்பட, 5 பேர் உயிரிழந்தனர். ஓடை நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியை தேடி வருகின்றனர்.
பெஞ்சல் புயல் காரணமாக கடலுார், விழுப்புரம் மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்ததால், பெரும்பாலான நீர்நிலைகள் நிரம்பி உள்ளன. அதை தொடர்ந்து, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலுார் மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் நீர்நிலைகளில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்துள்னர்.
விழுப்புரம் மாவட்டம், கிளியனுார் அடுத்த பழைய கொஞ்சிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் காத்தவராயன் மகள் நர்மதா, 17; புதுக்குப்பம் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். அதே பள்ளியில் படித்து வருபவர் துளசிதாஸ் மகள் அனுஸ்ரீ,16; ஆறுமுகம் மகன் நரேஷ்,10; மூவரும், கிளியனுார் அடுத்த புதுக்குப்பம் ஏரியில் இருந்து தண்ணீர் வெளியேறும் கொஞ்சிமங்கலம் ஓடையில் குளித்தனர்.
அப்போது, கலிங்கலுக்கு செல்லும் ஓடையை நர்மதா, அனுஸ்ரீ ஆகிய இருவரும் கடக்க முயன்றபோது, ஆழப்பகுதியில் சிக்கி வெள்ள நீரில் அடித்து செல்லப்பட்டனர். ஊர் மக்கள் தேடியதில் நர்மதாவை மீட்டு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே நர்மதா இறந்து விட்டதாக தெரிவித்தார். ஓடையில் அடித்து செல்லப்பட்ட அனுஸ்ரீயை தேடும் பணியில் வானுார் தீயணைப்பு நிலைய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கிளியனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி அடுத்த வேம்பியை சேர்ந்தவர் வெங்கடேசன், 57; சலவை தொழிலாளி. இவர், நேற்று மதியம் 12:00 மணிக்கு அப்பகுதியில் உள்ள ஏரியில் துணி துவைத்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
விழுப்புரம்
விழுப்புரம் அருகே உள்ள கலிஞ்சிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன், 60; கூலித்தொழிலாளி. இவர், நேற்று முன்தினம், அதே ஊரில் உள்ள ஏரிக்குச் சென்றுள்ளார். அப்போது தவறி விழுந்த அவர், நீரில் மூழ்கி இறந்தார். வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை
உளுந்துார்பேட்டை அடுத்த பச்சைவெளி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் மகன் ஹரிகிருஷ்ணன், 9; அதே ஊரில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளி விடுமுறை என்பதால், மதியம் 1:00 மணியளவில் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள குட்டையில் குளித்தார். அப்போது, ஆழமான பகுதிக்குச் சென்ற ஹரிகிருஷ்ணன் நீரில் மூழ்கினார். அங்கிருந்தவர்கள் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஏற்கனவே ஹரிகிருஷ்ணன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
ஸ்ரீமுஷ்ணம்
கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கள்ளிப்பாடியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்கரவர்த்தி மகன் சக்திவேல்,14; .எட்டாம் வகுப்பு படித்து வந்தார். இவர், நேற்று காலை நண்பர்களுடன் கள்ளிப்பாடி வெள்ளாற்று தடுப்பணையில் குளிக்க சென்றார். அப்போது, சக்திவேல் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டார்.
கரையில் நின்று பார்த்துக்கொண்டிருந்த கிராம இளைஞர்கள் சிலர் காப்பாற்ற முயன்றும் முடியாததால், சக்திவேல் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி, ஆற்றின் நடுவில் முட்புதரில் சிக்கியிருந்த சக்திவேல் உடலை மீட்டனர். ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.