என்.ஆர்.காங்., முன்னாள் துணை சபாநாயகர் காங்., கட்சியில் இணைய முடிவு
என்.ஆர்.காங்., முன்னாள் துணை சபாநாயகர் காங்., கட்சியில் இணைய முடிவு
ADDED : ஜன 25, 2026 04:31 AM

மண்ணாடிப்பட்டு தொகுதியில் வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் என்.ஆர்.காங்., முன்னாள் துணை சபாநாயகர் செல்வம், காங்., கட்சியில் இணைய முடிவு செய்து விருப்ப மனு அளித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலத்தில் முதல் தொகுதியான மண்ணாடிப்பட்டு தொகுதியில் கடந்த 2011 மற்றும் 2016 ஆண்டு சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., சார்பில், போட்டியிட்டு வெற்றி பெற்றவர் செல்வம். 2011-16 வரை துணை சபாநாயகராக பதவி வகித்தார். இதையடுத்து 2021ல் நடந்த சட்டசபை தேர்தலில் என்.ஆர்.காங்., பா.ஜ., கூட்டணியில் அமைச்சர் நமச்சிவாயம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடும் வகையில் பா.ஜ.,விற்கு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதன் காரணமாக இரண்டு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்த செல்வத்திற்கு சீட் மறுக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த செல்வம் தேர்தலில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயத்திற்கு ஆதரவாக செயல்படாமல் மவுனமாக இருந்தார். இருப்பினும், மண்ணாடிப்பட்டு தொகுதியில் வெற்றி பெற்று உள்துறை அமைச்சராக நமச்சிவாயம் பதவி வகித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயத்திற்கு முதல்வர் அறிவுறுத்தலின் பேரில், செல்வம் ஆதரவு தெரிவித்து தொகுதி முழுதும் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். இருப்பினும் லோக்சபா தேர்தலில் அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்ததுடன், தனது சொந்த தொகுதியான மண்ணாடிப்பட்டில் குறைவான ஓட்டுகளை பெற்றார்.
இதனால் செல்வம் லோக்சபா தேர்தலில் ஆதரவு தெரிவித்தும் தொகுதியில் ஓட்டுகள் குறைந்ததால் அதிர்ச்சி அடைந்த அமைச்சர் நமச்சிவாயம், அதன்பின், தொகுதியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் என்.ஆர்.காங்., முன்னாள் துணை சபாநாயகரான செல்வத்தை அழைக்காமல் பா.ஜ., நிர்வாகிகளை மட்டும் வைத்துக் கொண்டு நலத்திட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இதனால் அதிருப்தியில் இருந்து வந்த முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் வரும் சட்டசபை தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதியில் மீண்டும் போட்டியிட முடிவு செய்து, முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வந்தார். இந்நிலையில் காங்., கட்சியில் இணைந்து, தொகுதியில் போட்டியிட முடிவு செய்துள்ள அவர், நேற்று முன்தினம் இரவு காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி ஆகியோரை சந்தித்து, கட்சியில் இணைவதற்கான விருப்பமனு அளித்தார். இதையடுத்து, ஓரிரு நாட்களில் காங்., கட்சியில் முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் இணைவார் என, தெரிகிறது.
இதனால் வரும் சட்டசபை தேர்தலில் காங்., சார்பில், முன்னாள் துணை சபாநாயகர் செல்வம் மண்ணாடிப்பட்டு தொகுதியில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
