புதுச்சேரியில் புரோக்கர்கள் ஆட்சி: மாஜி முதல்வர் நாராயணசாமி காட்டம்
புதுச்சேரியில் புரோக்கர்கள் ஆட்சி: மாஜி முதல்வர் நாராயணசாமி காட்டம்
UPDATED : அக் 15, 2026 05:03 PM
ADDED : அக் 15, 2026 04:40 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் புரோக்கர்கள் ஆட்சி நடப்பதாக முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
நிர்மலா சீதாராமன் தலைமையில் டில்லியில் நடந்த ஜி.எஸ்.டி., கூட்டத்தில் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். ஆனால் புதுச்சேரியில் நிதி அமைச்சர் பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி கூட்டத்தில் பங்கேற்காமல் புறக்கணித்துள்ளார். ஆனால் தலைமை செயலர், நிதி செயலர் கலந்து கொண்டுள்ளனர். அதிகாரிகளுக்கு கூட்டத்தில் பேச உரிமை கிடையாது.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த அரசு எந்த நடவடிக்கைம் எடுக்கவில்லை. பண்டிகை காலம் நெருங்குவதால், பொதுத் துறை நிறுவனங்கள் மூலம் அத்யாவசிய பொருட்களை வழங்க வேண்டும். நிதி இல்லாமல் கோப்பு அனுப்பினால், நிதி துறை ஏற்றுக் கொள்ளாது.
முதல்வர் அறிவிக்கும் திட்டங்களுக்கு நிதியாதாரத்தை ஆட்சியாளர்கள் உருவாக்க வேண்டும். தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில், கோடிக்கணக்கான ரூபாயை என்.ஆர்.காங்., பா.ஜ., செலவு செய்துள்ளது. முதல்வரே கோடிக்கணக்கில் பணம் செலவு செய்து ஆட்சிக்கு வந்திருக்கிறார். தற்காலிக சபாநாயகர் நிரந்தர சபாநாயகர் மாதிரி செயல்படுகிறார்.
கொலை, கொள்ளை, கற்பழிப்பு சர்வசாதாரணமாக நடக்கிறது. கஞ்சா, அபின் உலாவுகிறது. பியூட்டி பார்லர் என்ற போர்வையில் விபசாரம் நடக்கிறது. இதற்கு காவல் துறைதான் காரணம். புதுச்சேரியில் புரோக்கர் ஆட்சி நடக்கிறது. புதுச்சேரி முதல்வரை சுற்றி 6 புரோக்கர்கள் செயல்படுகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
