/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நில மோசடி வழக்கில் கைதான மாஜி சப் கலெக்டருக்கு ஜாமின்
/
நில மோசடி வழக்கில் கைதான மாஜி சப் கலெக்டருக்கு ஜாமின்
நில மோசடி வழக்கில் கைதான மாஜி சப் கலெக்டருக்கு ஜாமின்
நில மோசடி வழக்கில் கைதான மாஜி சப் கலெக்டருக்கு ஜாமின்
ADDED : டிச 06, 2024 05:59 AM

காரைக்கால்: காரைக்காலில் கோவில் நிலமோசடி வழக்கில் கைதாகி சிறையில் இருந்த மாஜி சப் கலெக்டருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.
காரைக்கால், கோவில்பத்து கிராமத்தில் உள்ள பார்வதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 8 ஏக்கர் நிலத்தை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் விற்பனை செய்ய உள்ளதாக காரைக்கால் முன்னாள் சப் கலெக்டர் ஜான்சன், முன்னாள் கலெக்டர் ஆகியோரின் கையெழுத்துடன் கூடிய அரசாணை சமூக வலைதளங்களில் பரவியது.
அதையடுத்து கவர்னர் உத்தரவின்பேரில், விசாரணை நடத்தினார். அதில் கெயில் நிறுவனத்திற்கு பார்வதீஸ்வரர் கோவில் நிலத்தில் 10 ஏக்கர் குத்தகைக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் கெயில் நிறுவனம் 2 ஏக்கர் நிலம் போதும் எனக்கூறி மீதி, 8 ஏக்கர் நிலத்தை அரசிடம் ஒப்படைத்தது.
நிலத்தில் இலவச எல்.ஜி.ஆர்., மனைப்பட்டா வழங்குவதாக கூறி அரசு அதிகாரிகள் உதவியுடன் சில அரசியல் கட்சியினர் போலி ஆவணங்கள் மற்றும் லே அவுட் உருவாக்கி, 186 மனைப்பட்டா தயார் செய்து 70 மனைகள் தலா 10 லட்சத்திற்கும், மீதி மனைகள் தலா 3 லட்சம் ரூபாய் வீதம் முன்பணம் பெற்றது தெரியவந்தது.
அதன்பேரில் இடைத்தரகர்கள் சிவராமன், திருமலை, போலி லே-அவுட் தயார் செய்த மாஜி நகராட்சி நில அளவையாளர் ரேணுகாதேவி, போலி ஆவணம் தயார் செய்த டாக்குமண்ட் ரைட்டர் கார்த்திக் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் விசாரணையில், நில மோசடி சம்பவம் மாஜி சப்கலெக்டர் ஜான்சன் தலைமையில் கூட்டு சதி நடந்தது தெரியவந்தது.
அதையடுத்து கடந்த அக்.,11ம் தேதி சப் கலெக்டர் ஜான்சன் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதையடுத்து அவர், பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவரது உடல்நிலை காரணமாக நீதிமன்றத்தில் ஜாமின் கோரி மனுதாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் விசாரணை மேற்கொண்ட மாவட்ட நீதிபதி முருகானந்தம், முன்னாள் சப் கலெக்டர் ஜான்சனுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினார்.
அவர், தினம் புதுச்சேரி, முத்தையால்பேட்டை காவல் நிலையத்தில் காலை 10:00 மணிக்கு கையொழுத்திட வேண்டும். வாரம் சனிக்கிழமை காரைக்கால் நகர காவல் நிலையத்தில் ஆஜராகி கையொழுத்து போட வேண்டும் என, நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து 54 நாட்கள் சிறையில் இருந்த சப் கலெக்டர் ஜான்சன் வெளியில் வந்தார்.