ADDED : செப் 26, 2026 06:20 PM
புதுச்சேரி: தனியார் பள்ளி தாளாளரிடம் இ.சலான் மூலம் ரூ.9.75 லட்சம் மோசடி செய்த கும்பல் குறித்து போலீசார் விசாரிதது வருகின்றனர்.
ரெட்டியார்பாளையம், அஜீஸ் நகரை சேர்ந்தவர் ஜேசுதாஸ், 59. இவர், சண்முகாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி தாளாளர். கடந்த மாதம் மறு விற்பனை செய்யப்படும் இருசக்கர வாகனம் ஒன்றை ஜேசுதாஸ், அவரது மகன் மூலம் வாங்கினார்.
அந்த வாகனத்திற்கு, பெயர் மாற்றம் செய்யும் பணிகள் நடந்து வந்த நிலையில், ஜேசுதாஸை, ஒருவர் தொடர்பு கொண்டு தமிழக ஆர்.டி.ஓ., அலுவலகத்திலிருந்து பேசுவதாக கூறியுள்ளார்.
கடந்த 18ம் தேதி ஜேசுதாஸின் வாட்ஸ் ஆப்பில் ஸ்ரீதர் என்ற பெயரில் குறுந்தகவல் வந்துள்ளது. அதில், ஆர்.டி.ஓ. இ-சலான் செயலி பதிவிறக்கம் செய்யுமாறு இருந்தாக தெரிகிறது.
அது வாகனத்தின் பெயர் மாற்றம் செய்யவதற்கான பணி என்று நினைத்து ஜேசுதாஸ், அந்த செயலியை அவரது மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து, அனைத்து விவரங்களையும் பதிவு செய்தார். அதையடுத்து கடந்த 21ம் தேதி ஜேசுதாஸ் வங்கி கணக்கலிருந்த ரூ.4.80 லட்சம் , ரூ.4.95 லட்சம் என, இரண்டு தவணையாக ரூ.9.75 லட்சம் இருந்து எடுக்கப்பட்டது.
அதிர்ச்சியடைந்த ஜேசுதாஸ் இதுகுறித்து சைபர் கிரைம் இணையதளத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் புதுச்சேரி சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
