/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் நாளை இலவச மருத்துவ சேவை
/
புதுச்சேரியில் நாளை இலவச மருத்துவ சேவை
ADDED : டிச 05, 2024 07:00 AM

புதுச்சேரி; புதுச்சேரியில் வெள்ளத்தால் ஏற்படும் நோய் பாதிப்புகளில் இருந்து பொதுமக்களை காக்கும் வகையில், 1,500 டாக்டர்கள், நாளை கட்டணமில்லா மருத்துவ சேவை வழங்க உள்ளனர்.
ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கமான ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் கீழ் சேவா பாரதி பிரிவு இயங்கி வருகிறது. பேரிடர் காலங்களில் பொது மக்களுக்கு உதவி செய்வதற்காக, அர்ப்பணிக்கப்பட்ட இந்த பிரிவில், தன்னார்வலர்கள் பலர் சேவை மனப்பான்மையுடன் தொண்டாற்றி வருகின்றனர்.
தற்போது, பெஞ்சல் புயல் பாதித்த புதுச்சேரி பகுதியில், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக 155 பெண்கள் உட்பட 955 தன்னார்வலர்கள் மக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இவ்வமைப்பின் சார்பில், வெள்ளம் பாதித்த பகுதிகளில், ரூ.50 லட்சம் மதிப்பில், பொதுமக்களுக்கு உணவு, பால் பாக்கெட், குடிநீர், போர்வை, மெழுகுவர்த்தி, தீப்பெட்டி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
இந்த சேவையால், 42 ஆயிரம் பேர் பயன்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் சேவா பாரதி சங்கம், இந்திய மருத்துவ சங்கம் புதுச்சேரி கிளை மற்றும் புதுச்சேரி அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து இலவச மருத்துவ முகாம், கட்டணம் இல்லா மருத்துவ சேவை, நடமாடும் மருத்துவ வாகனம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்க உள்ளது.
இது குறித்து சேவா பாரதி புதுச்சேரி பொறுப்பாளர் சித்தார்த், இந்திய மருத்துவ சங்க புதுச்சேரி கிளை மாநில தலைவர் சுதாகர், மாநில செயலாளர் சீனுவாசன், புதுச்சேரி அரசு மருத்துவ அதிகாரிகள் சங்க தலைவர் அன்பு செந்தில் ஆகியோர் கூறியதாவது:
வெள்ளத்தால் பொதுமக்களுக்கு காய்ச்சல், டைபாய்டு, மலேரியா, டெங்கு, வாந்திபேதி உள்ளிட்ட பல்வேறு நோய்கள் பரவ வாய்ப்புள்ளன. இதனால் நாளை 6ம் தேதி, புதுச்சேரி, செல்வநாதன் திருமண மண்டபத்தில் இலவச மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளோம். பொதுமக்கள் இதில் பங்கேற்று சிகிச்சை பெறலாம்.
அதுமட்டுமின்றி, அன்றைய தினம் புதுச்சேரியில் எங்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ள, 1,500 டாக்டர்கள், கட்டணமின்றி மருத்துவ சேவை வழங்க உள்ளனர்.
இதன் விவரம் சம்மந்தப்பட்ட டாக்டர்களின் கிளினிக் மற்றும் மருத்துவமனைகளில் அன்றைய தினம் ஒட்டி வைக்கப்படும். அதை பார்த்து பொதுமக்கள் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கட்டணமில்லா மருத்துவ சேவை வரும், 13ம் தேதியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
வௌ்ளத்தால் வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியே வர முடியாத, பகுதிகளுக்கு சென்று நடமாடும் மருத்துவ வாகனம் மூலம் சிகிச்சை வழங்க உள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.