புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்; பிரெஞ்சு செனட் குழு நேரில் ஆய்வு
புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள்; பிரெஞ்சு செனட் குழு நேரில் ஆய்வு
ADDED : ஏப் 13, 2026 11:34 PM

புதுச்சேரி: புதுச்சேரியின் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை பிரெஞ்சு செனட் குழுவினர் நேரில் ஆய்வு செய்து, பொதுமக்களுடன் கலந்துரையாடினர்.
புதுச்சேரியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் ஒரு அங்கமாக, புதுமையான நகர்ப்புற உள்கட்டமைப்பினை மேம்படுத்தும் நோக்கில் சிட்டிஸ் திட்டமும் கடந்த 2023ம் ஆண்டு முதல் செயல்படுகிறது. இது வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் , பிரெஞ்சு மேம்பாட்டு முகமை, ஐரோப்பிய ஒன்றியம், தேசிய நகர்ப்புற விவகாரங்களுக்கான நிறுவனம் ஆகியவற்றின் கூட்டுத் திட்டம். புதுச்சேரியிலும் 100 கோடிக்கு மேல் இத்திட்டம் செயல்படுத்தப்படுகின்றது.
இந்த நிலையில் புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் சிட்டிஸ் திட்டத்தின் நகர வளர்ச்சிப் பணிகளை, பிரெஞ்சு செனட் உறுப்பினர்கள் அடங்கிய குழுவினர், பிரெஞ்சு வளர்ச்சி முகமையின் தலைவர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்
இந்தியா - பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஆழமான நட்புறவை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இந்தப் ஆய்வின் போது, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட இரண்டு முக்கியப் பகுதிகள் ஆய்வு செய்யப்பட்டன. முதலில் துப்ராயப்பேட்டை குடியிருப்பு திட்டத்தை குழுவினர் ஆய்வு செய்தனர்.
நவீன வசதிகளுடன் கூடிய, மனிதத் தேவைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட தரமான வீடமைப்பு மாதிரியை குழுவினர் பார்வையிட்டனர். அடுத்து பாவனார் நகர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சாலைகள், வடிகால் வசதி, நவீன தெருவிளக்குகள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு என முழுமையாக மறுசீரமைக்கப்பட்ட நகர்ப்புற சூழலை ஆய்வு செய்தனர்.
மக்களுடன் சந்திப்பு:
ஆய்வின் ஒரு பகுதியாக, இத்திட்டங்களால் பயன்பெற்ற குடியிருப்பாளர்களுடன் பிரதிநிதிகள் நேரடியாக உரையாடினர். அப்போது பயனாளிகள், வீடுகள் தரமாக கட்டப்பட்டுள்ளது. பாதுகாப்பான சூழல் மற்றும் சுகாதார வசதிகளால் தங்களின் சமூக அந்தஸ்து உயர்ந்துள்ளது என பொதுமக்கள் நெகிழ்ச்சியுடன் குழுவினரிடம் தெரிவித்தனர்.
அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
ஸ்மார்ட் சிட்டி நிறுவனம், உழவர்கரை நகராட்சி மற்றும் புதுச்சேரி குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுடன் இக்குழுவினர் விரிவான ஆலோசனை நடத்தினர். திட்டமிடல், தொழில்நுட்பத் தரம் மற்றும் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு குறித்து அவர்கள் கேட்டறிந்தனர்.
புதுச்சேரிக்கு பாராட்டு
ஆய்வின் முடிவில் பேசிய பிரெஞ்சு பிரதிநிதிகள், புதுச்சேரி அரசின் இத்தகைய முன்னோக்கிய பார்வை பாராட்டுக்குரியது. இங்கு செயல்படுத்தப்பட்டுள்ள சிட்டிஸ் திட்டங்கள் இந்தியாவின் பிற ஸ்மார்ட் நகரங்களுக்கு ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்கின்றன. குறிப்பாக, நகர்ப்புற ஏழை மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த இத்திட்டங்கள் மிகப்பெரிய பங்காற்றியுள்ளன, என பாராட்டினர்.
ஆய்வுப் பயணம், புதுச்சேரியை நிலைத்த நகர வளர்ச்சியின் உலகளாவிய மையமாக அடையாளப்படுத்தியதோடு, இந்தியா - பிரான்ஸ் இடையிலான உறவை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.
