ADDED : மே 28, 2026 06:33 AM

புதுச்சேரி: புதுச்சேரி பிரெஞ்சு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி பல் கலைக்கழக ஓய்வு பெற்ற பிரெஞ்சுத் துறை பேராசிரியர் பன்னீர்செல்வம் தலைமையில் பிரெஞ்சு மொழி அவசியம் குறித்து மவுன ஊர்வலம் நடத்தினர்.
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அமலாக்கத்திற்குப் பிறகு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் பிரெஞ்சு மொழிக்கு வழங்கப்பட்டு வந்த முக்கியத்துவம் குறைக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, புதுச்சேரி பிரெஞ்சு ஆசிரியர்கள் சங்கம் மற்றும் புதுச்சேரி பல்கலைக்கழக ஓய்வு பெற்ற பிரெஞ்சுத் துறை பேராசிரியர் பன்னீர்செல்வம் தலைமையில் மவுன ஊர்வலம் நேற்று மாலை காமராஜர் சிலையில் துவங்கி, ராஜா தியேட்டர் சிக்னல், நேரு வீதி, மிஷன் வீதி வழியாக சட்டசபை அருகில் ஆம்பூர் சாலையில் முடிந்தது.
ஊர்வலத்தில் பிரெஞ்சு மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் பதாகைகளை ஏந்தி சென்றனர். தொடர்ந்து பேரணியில் ஈடுப்பட்ட பிரெஞ்சு ஆசிரியர்கள் சங்கப் பிரதிநிதிகள் முதல்வர் ரங்கசாமியை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர்.
ஏற்பாடுகளை சங்க தலைவர் ஆரோன், செயலர் புவனேஸ்வரி, ஆசிரியை நிவேதா மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
