மீனவ சமுதாய மாணவர்களுக்கு முழு கல்வி தொகை: முதல்வர் அறிவிப்பு
மீனவ சமுதாய மாணவர்களுக்கு முழு கல்வி தொகை: முதல்வர் அறிவிப்பு
ADDED : ஆக 29, 2026 05:50 PM
புதுச்சேரி. ஆக. 30–: மீனவ சமுதாய மாணவர்களின் முழு கல்வி தொகை வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி தெரிவித்தார்.
சட்டசபை பதிலுரையில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
தற்போது மாநில சொந்த நிதி 70 சதவீதமாகவும், மத்திய அரசின் நிதி 30 சதவீதமாகவும் உள்ளது. இருப்பினும் வரியில்லா பட்ஜெட் தாக்கல் செய்கிறோம். மாநில வருவாயை திட்டமிட்டு உயர்த்தியும் வருகிறோம். பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி சம்பளம், பென்ஷன், கடன், வட்டிக்காக அதிகம் செலவிடப்படுகிறது.
புதுச்சேரிக்கு கடன் பெற அனுமதி அளிக்கப்படுகிறது. அப்படி கடன் வாங்கினால் திரும்ப செலுத்த வேண்டும். மத்திய அரசு கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். மக்கள் மீது வரி சுமையில்லாமல் வருவாயை பெருக்க கவனம் செலுத்தப்படுகிறது.
பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் நிதி 96 சதவீதம் வரை செலவழிக்கப்படுகிறது. கடந்த ஆட்சியில் பொது துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் உள்ளன. அரசு மூலதனம் அளித்தால், அதன் மூலம், வருவாயை பெருக்கி ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும். ஆனால் சில நிறுவனங்கள் அப்படி நடக்கவில்லை. அரசு ஊழியர்கள் என்ற நினைப்பில் வருவாயை பெருக்காமல் விட்டுவிட்டனர். இதனால் சில நிறுவனங்கள் மூடப்படும் நிலையில் உள்ளது. தனியார் பங்களிப்புடன் கூட்டுறவு நடத்த ஆலோசித்து வருகிறோம். கரசூரில் இந்த ஆண்டே தொழிற்பேட்டை கொண்டுவரப்படும்.
ஆதிதிராடவிடர் மாணவர்களுக்கு வழங்குவதுபோல், மீனவ சமுதாய மாணவர்களுக்கும் கல்வி தொகை முழுமையாக வழங்கப்படும். காஸ் மானியம் ரூ. 50 உயர்த்தப்பட்டு, சிவப்பு கார்டுக்கு ரூ.350 ஆகவும், மஞ்சள் கார்டுக்கு ரூ. 200 ஆகவும் வழங்கப்படும்.
தடையில்லா மின்சாரம், பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். லாஸ்பேட்டை, தவளகுப்பத்தில் துணை மின் நிலையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். காலி பணியிடங்கள் நிரப்படும்’ என்றார்.
