ADDED : மார் 01, 2024 03:24 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் நடக்கும் கேலோ இந்தியா தேக்வாண்டோ மகளிர் விளையாட்டு போட்டிகள் இன்றுடன் நிறைவடைகிறது.
புதுச்சேரியில் முதன்முறையாக, மத்திய அரசின் கேலோ இந்தியா தேக்வோண்டோ மகளிர் விளையாட்டு போட்டி, கடந்த பிப்.27,ம் தேதி துவங்கியது.
இதற்காக நிறுவப்பட்ட குழுவில், புதுச்சேரியை சார்ந்த, ஸ்போர்ட்ஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா பொறுப்பு இயக்குனர் ராஜேஷ், உதவி பயிற்சியாளர் மனோஹரா, கணக்காளர் ராஜகோபால்,போட்டியின் ஒருங்கிணைப்பாளராக தேக்வாண்டோ சங்கத்தலைவர் ஸ்டாலின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதன் துவக்க விழாவில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், தேனீ ஜெயக்குமார், செல்வகணபதி எம்.பி, அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., பங்கேற்றனர். நிகழ்ச்சியின் அம்பாசிடராக, நடிகை நிரோஷா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த போட்டி இன்றுடன் நிறைவடைவதையொட்டி டேக்வாண்டோ விளையாட்டு சங்கத்தலைவர் ஸ்டாலின் கூறியதாவது:
அரசு அங்கீகாரம் பெற்ற போட்டி என்பதால், முறையாக விண்ணப்பங்கள் இணையதளம் வாயிலாக பெறப்பட்டு உயர் மட்ட குழு மூலம், பரிசீலிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட, 600க்கும் மேற்பட்ட வீராங்கனையர் பங்கேற்றுள்ளனர்.
கேடட், ஜூனியர், சீனியர் என, 23 பிரிவுகளில், போட்டி நடத்தப்படுகிறது. இதில், முதலிடம் பெறுபவர்களுக்கு, ரூ. 7 ஆயிரமும், இரண்டாம் இடம் பெறுபவர்களுக்கு 5 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடிக்கும் இருவருக்கு, தலா 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
