விநாயகர் சிலைகள் ஊர்வலம் புதுச்சேரி கடலில் விஜர்சனம்
விநாயகர் சிலைகள் ஊர்வலம் புதுச்சேரி கடலில் விஜர்சனம்
ADDED : செப் 20, 2026 09:32 PM
புதுச்சேரி: இந்து முன்னணி விநாயகர் சதுர்த்தி பேரவை சார்பில் பிரதிஷட்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன.
புதுச்சேரி சாரம் அவ்வை திடலில் இந்து முன்னணி மற்றும் விநாயகர் சதுர்த்தி பேரவை சார்பில், 21 அடி உயர பிரமாண்ட விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, தினமும் பூஜைகள் நடந்து வந்தது. இந்நிலையில், முதல் கட்டமாக கிராமப்புறங்களில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் கடந்த 16ம் தேதி விஜர்சனம் செய்யப்பட்டு, காலப்பட்டு, நல்லவாடு கடற்கரையில் கரைக்கப்பட்டன. நகரப் பகுதியில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளின் விஜர்சன ஊர்வலம் நேற்று மதியம் நடந்தது.
முன்னதாக காலை நெட்டப்பாக்கம், திருக்கனுார், காட்டேரிக்குப்பம் உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் சாரம் அவ்வை திடல் வளாகத்திற்கு கொண்டுவரப்பட்டன.
பின், சாரம் அவ்வை திடலில் மதியம் சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்டு ஊர்வலம் துவங்கியது. சாரம் அவ்வை திடலில் மேள தாளங்கள் முழுங்க துவங்கிய ஊர்வலம், காமராஜர் சாலை, நேரு வீதி, காந்தி வீதி, எஸ்.வி., பட்டேல் சாலை சாலை வழியாக கடற்கரையை மாலை சென்றடைந்தது.
தொடர்ந்து விநாயகர் சிலைகளுக்கு பூஜை செய்யப்பட்டு கடலில் விஜர்சனம் செய்யப்பட்டன. 21 அடி விநாயகர் சிலை கிரேன் மூலம் கடலில் கரைக்கப்பட்டது. விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் மற்றும் நடிகர் ரஞ்சித், இந்து முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ஊர்வலத்தின்போது, சீனியர் எஸ்.பி., கலைவாணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
