/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காங்., மக்கள் சந்திப்பு பாதயாத்திரை
/
காங்., மக்கள் சந்திப்பு பாதயாத்திரை
ADDED : ஜன 22, 2026 05:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி காங்., சார்பில் தொகுதி தோறும் மக்களை சந்திக்கும் பாதயாத்திரை இயக்கத்தை கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் நேற்று தொடங்கி வைத்தார்.
வரும் சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாகும் பொருட்டு, காங்., கட்சியினர், ஆளும் என்.ஆர்.காங்., -பா.ஜ., கூட்டணி அரசை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அதன்படி, ஆளும் கட்சியின் ஊழலை மக்களுக்கு விளக்கும் வகையில் தொகுதி தோறும் பாதயாத்திரையாக சென்று பிரசாரம் மேற்கொள்ளும் இயக்கத்தை நேற்று துவக்கினர். இந்த பாதயாத்திரை வரும் 5ம் தேதி வரை நடக்கிறது.இதன் துவக்க விழா முத்தியால்பேட்டை மார்க்கெட் அருகில் நேற்று மாலை நடந்தது.
மாநில செயலாளரும், தொகுதி பொறுப்பாளருமான ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மூத்த தலைவர் தேவதாஸ், வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜகான், முன்னாள் மாநில தலைவர் சுப்ரமணியன்,முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், பாலன், கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.முத்தியால்பேட்டை காங்., அலுவலகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் காந்தி வீதி வழியாக, நடைபயணம் மேற்கொண்டனர்.
அப்போது, பா.ஜ., அரசின் ஓட்டு திருட்டை கண்டித்தும், புதுச்சேரி அரசின் போலி மருந்து முறைகேட்டை கண்டித்தும் கோஷமிட்டனர். அரசுக்கு எதிரான துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கினர்.
முன்னதாக, புதுச்சேரி காங்., மேலிட பொறுப்பாளர்கள் கிரீஷ் சோடங்கர்,சுரஞ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகியோர் முத்தியால்பேட்டை, பெருமாள் வீதி காங்., அலுவலகத்தில் கட்சி கொடியேற்றி, கல்வெட்டை திறந்து வைத்தனர்.

