புதுச்சேரியில் காஸ் தட்டுப்பாடு எதிரொலி: சுற்றுலா பாதிக்கும் அபாயம்
புதுச்சேரியில் காஸ் தட்டுப்பாடு எதிரொலி: சுற்றுலா பாதிக்கும் அபாயம்
ADDED : மார் 11, 2026 04:05 AM
புதுச்சேரி: காஸ் தட்டுப்பாடு காரணமாக புதுச்சேரியில் சுற்றுலா சேவை பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்கா போர் தொடுத்துள்ளதால், இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலமையை சமாளிக்கு வீட்டு உபயோக சிலிண்டர், 21 நாட்கள் என்பதை 25 நாட்களுக்கு பிறகே பதிவு செய்யவும், வணிக சிலிண்டர் வினியோகத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இதனால், சுற்றுலா நகரமான புதுச்சேரியில் இயங்கி வரும் 20க்கும் மேற்பட்ட நட்சத்திர ஓட்டல்கள், 700க்கும் மேற்பட்ட பெரு மற்றும் சிறு ஓட்டல்கள், 500க்கும் மேற்பட்ட டீ மற்றும் காபி கடைகள் மற்றும் 200க்கும் மேற்பட்ட சாலையோர இரவு கடைகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து ஓட்டல் உரிமையாளர் சங்க தலைவர் அப்துல்சுபான் கூறுகையில், 'புதுச்சேரியில் நாளொன்றுக்கு 600 முதல் 700 வணிக காஸ் (19 கிலோ) சிலிண்டர்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு முன் அறிவிப்பு இல்லாமல், வணிக காஸ் சிலிண்டர் வினியோகத்தை திடீரென தடை செய்துள்ளது. நகரப் பகுதி ஓட்டல்களில் விறகு அடுப்பு பயன்படுத்த முடியாது என்பதால், பெரும்பாலான ஓட்டல்கள் மூட வேண்டிய நிலைக்கு உள்ளாகி உள்ளது.
குறிப்பாக நடைபாதை ஓட்டல்கள், டீ கடைகளில் மின்சார அடுப்பும் பயன்படுத்த முடியாது. விறகு அடுப்பும் பயன்படுத்த முடியாது.
இட வசதி உள்ள பெரிய ஓட்டல்களில் ஒரே இடத்தில் சாப்பாடு, பிரியாணி, இட்லி, பொங்கல், உப்புமா போன்ற உணவுகளை மட்டுமே தயார் செய்து வினியோகிக்க முடியும். காஸ் அடுப்பு இல்லாததால், பிரைடு ரைஸ், நுாடூல்ஸ், தோசை வகைகள் செய்ய முடியாது. இதனால், சுற்றுலா பயணிகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாவர் என்பதால், சுற்றுலாவும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது' என்றார்.
