ADDED : மார் 07, 2024 04:06 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் சிறுமி மாயமான தினத்தன்று மாலையே சோலை நகர் மற்றும் முத்தியால்பேட்டை போலீசில் புகார் அளித்தனர்.
போலீசார் வழக்கம்போல் அலட்சியமாக விசாரணையை துவக்கினர். சிறுமியின் வீட்டை சுற்றியே தேடினர். மறுநாள் மோப்ப நாய் வரவழைத்து தேடும் பணி நடந்தது. மோப்ப நாய் சிறுமியின் வீட்டில் இருந்து சிறிது துாரம் சென்று நின்று விட்டது. 'சிசி டிவி' காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், சிறுமி கண்ணதாசன் வீதியில் நடந்து செல்லும் காட்சி பதிவாகி உள்ளது. அதற்கு அடுத்துள்ள வீட்டில் உள்ள 'சிசி டிவி'யில் பதிவான காட்சிகள் தானாக அழிந்துவிட்டது.
அழிந்துவிட்டதாக கூறப்பட்ட 'சிசி டிவி'யின் ஹார்டு டிஸ்க் மூலம் அழிக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் ரெக்கவரி செய்து பார்த்திருந்தால் அன்றே கொலை குற்றவாளிகளை கைது செய்திருக்க முடியும். அதில் போலீசார் கோட்டை விட்டனர்.
அதுபோல் சந்தேக நபர்களை பிடித்து தீவிர விசாரணை செய்யாமல், மேலோட்டமாக விசாரித்ததால் உண்மை வெளியே வரவில்லை. இதனால் கால தாமதம் ஏற்பட்டது. சிறுமி மாயமான இடத்தில் இருந்து 100 மீட்டர் துாரத்திற்கு அப்பால் உள்ள 'சிசி டிவி'க்களில் சிறுமி குறித்து எதுவும் பதிவாகவில்லை என்பதால் சிறுமி வெளியே செல்லவில்லை என்பதை உறுதி செய்தனர்.
மூன்றாவது நாள் சிறுமி இறந்திருக்கலாம் என கருதிய போலீசார், அங்குள்ள செப்டிக் டேங்க், குடிநீர் தொட்டி, ரெப்ரிஜரேட்டர்களை வீடு வீடாக சென்று ஆய்வு செய்தனர். அப்போதும் சிறுமியை போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.
நான்காவது நாள் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் உடல் அழுகும் நிலையில், கழிவுநீரில் இருந்து சிறுமியின் உடல் வெளியே வந்தது. துர்நாற்றம் காரணமாக சிறுமி உடல் மிதப்பது வெளியே தெரிந்தது. அதன் பிறகே போலீசார் உடலை கண்டுபிடித்தனர். சிறுமி கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட தகவலும் வெளியானது.
இவை அனைத்தும் சிறுமி மாயமான வீட்டில் இருந்து 100 மீட்டர் துாரத்திலே நடந்து முடிந்து விட்டது.
அப்பகுதியில் யார் கஞ்சா பழக்கம் உள்ளவர்கள். யார் யார் சிறுமியிடம் நெருங்கி பழகுபவர்கள் என விசாரணையை துவக்கி இருந்தால் சிறுமியை முதல் நாளிலே கண்டுபிடித்திருக்க முடியும். அதிநவீன வசதிகள் இருந்தும் ஆரம்பத்திலே போலீசார் அலட்சியமாக கையாண்டதால், சிறுமியை உயிருடன் மீட்காமல் சடலமாக மீட்டனர். சிறுமி மாயமான கண்ணதாசன் வீதி காடு, பாலைவனம், மலை பகுதி கிடையாது.
மக்கள் நடமாட்டம் மிக்க பகுதி. அருகருகே வீடுகள் உள்ளது. எப்போதும் சாலையில் மக்கள் அமர்ந்திருப்பர். இந்த பகுதியில் மாயமான சிறுமியை கண்டுபிடிக்க முடியாமல், 4 நாள் கழித்து சடமாக மீட்கப்பட்டது ஒட்டுமொத்த போலீசும், இந்த வழக்கில் தோல்வி அடைந்ததை காட்டுகிறது.
