/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுமி கொலை வழக்கு: அரசியல் கட்சி தலைவர்கள் பேட்டி
/
சிறுமி கொலை வழக்கு: அரசியல் கட்சி தலைவர்கள் பேட்டி
சிறுமி கொலை வழக்கு: அரசியல் கட்சி தலைவர்கள் பேட்டி
சிறுமி கொலை வழக்கு: அரசியல் கட்சி தலைவர்கள் பேட்டி
ADDED : மார் 07, 2024 04:06 AM
முன்னாள் முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி நகரம், கொலை நகரமாகவும், கஞ்சா நகரமாகவும், மாறி இருக்கிறது. பள்ளி மற்றும் கல்லுாரிகள் முன்பாகவும், கடற்கரை பகுதிகளிலும், கஞ்சா விற்பனை அதிகரித்து வருகிறது.சிறுமியின் கொலை, மன்னிக்க முடியாத குற்றம். எங்கள் அரசியல் சரித்திரத்தில், இதுவரை இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தது கிடையாது. முதல்வர் ரங்கசாமியும், உள்துறை அமைச்சர் நமச்சிவாயமும் பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்.
சிறுமியின் பெற்றோருக்கு, ரூ. 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அந்த சிறுமியின் தாய்க்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
தி.மு.க., அவைத் தலைவர் சிவக்குமார்
பொதுமக்கள் தெருவில் இறங்கி போராடி, தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். பள்ளிகளில் படிக்கின்ற சின்னஞ்சிறு பிள்ளைகள் அச்சத்தில் உள்ளனர். காவல் துறை தலைவர், விரைவாக தன் அதிகாரத்தை செயல்டுத்தி குற்றவாளிகளுக்கு உயர்ந்தபட்ச தண்டனையை பெற்று தருவது மட்டுமே ஆறுதலையும், அச்சமற்ற சூழலையும் ஏற்படுத்தும்.மாநிலம் முழுவதும் உள்ள இது போன்ற குற்றவாளிளை அதிரடியாக கைது செய்து தண்டனை வழங்கி மக்களை அச்ச உணர்விலிருந்து காத்திட வேண்டும்.
ஓ.பி.எஸ்., அணி செயலாளர் ஓம்சக்தி சேகர்
புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை இது போன்ற சம்பவம் நடந்தது இல்லை. போதைக்கு அடிமையான அப்பகுதி இளைஞர்களால் தான் இந்த கொடூரமான சம்பவம் நடந்ததாக மக்கள் கூறுகின்றனர். உண்மை குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும்.போதை பொருட்களை விற்கும் குற்றவாளிகளுக்கு துணை போகும் சில காவல்துறை அதிகாரிகளை அரசு கண்டறிந்து உடனே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
அ.தி.மு.க., துணை செயலாளர் வையாபுரி மணிகண்டன்
மதுபான தொழிற்சாலைகள், கவர்ச்சி நடன பார்களால் கலாசார சீரழிவை புதுச்சேரி சந்தித்து வருகிறது. வருவாயை மட்டுமே பிரதானமாக கருதும் முதல்வர், இதைப்பற்றி எள்ளளவும் கவலைப்படவில்லை.சிறுமியை கை, கால்களை கட்டிப்போட்டு பலாத்காரம் செய்யும் அளவுக்கு கொடூர சிந்தனைக்கு இளைய சமுதாயத்தினர் தள்ளப்பட்டது புதுச்சேரி வரலாற்றில் அழிக்க முடியாத களங்கம். சிறுமிக்கு ஏற்பட்ட வன்கொடுமை இனி புதுச்சேரியில் வேறு எந்த குழந்தைக்கும் ஏற்படக்கூடாது.
மா.கம்யூ., செயலாளர் ராஜாங்கம்
மாநிலத்தை சீரழிக்கும் மதுபான விடுதிகளையும், ரெஸ்ட்ரோ பார்களையும் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டு கொண்டே இருக்கிறது. இதற்கு தான் மக்கள் என்.ஆர்.காங்., - பா.ஜ., அரசை தேர்வு செய்தார்களா.பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் உரிய பாதுகாப்பு இல்லை. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய அரசு இன்றைக்கு சீர்கெட்டுள்ளது.
அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழக செயலாளர் விஜயா
பெருகி வரும் சீரழிந்த போதை கலாசாரத்தால் இளைஞர்கள் சமூக குற்றவாளிகளாக மாறி உள்ளதையே, இந்த சம்பவம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.பெண் குழந்தை கடத்தி கொலை செய்யப்பட்டதற்கு புதுச்சேரி அரசு தார்மீக பொறுப்பேற்க வேண்டும்.
இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு:
சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் புதுச்சேரியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி, போதை சேரியாக மாறியுள்ளது.
போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தவறிய பா.ஜ., -என்.ஆர்., காங்., அரசு பதவி விலக வேண்டும். சிறுமின் உயிரை காப்பாற்றாமல் மெத்தனமாக செயல்பட்ட முத்தியால்பேட்டை ஓட்டு மொத்த போலீசார் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

