தனியார் கம்பெனியில் ரூ. 2 லட்சம் பொருட்கள் திருட்டு; 2 பேர் கைது
தனியார் கம்பெனியில் ரூ. 2 லட்சம் பொருட்கள் திருட்டு; 2 பேர் கைது
ADDED : ஏப் 19, 2026 10:45 PM
புதுச்சேரி: திருபுவனை பிப்டிக் தொழிற்பேட்டை தனியார் கம்பெனியில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடப்பட்டது தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்தனர்.
திருபுவனை பிப்டிக் தொழிற்பேட்டையில், சிம்கார்டு மற்றும் ஏ.டி.எம்., கார்டு தயாரிக்கும் தனியார் கம்பெனி இயங்கி வந்தது. இந்த கம்பெனியில், கோரைக்கேணியை சேர்ந்த முத்துகுமார், 40, தலைமை மேலாளராக வேலை செய்து வந்தார். கம்பெனி கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் மூடப்பட்டது.
முத்துகுமார் மட்டும் கம்பெனி உரிமையாளர் அறிவுறுத்தலின் பேரில், கம்பெனிக்கு அடிக்கடி வந்து பார்வையிட்டு செல்வது வழக்கம். கடந்த 13ம் தேதி தலைமை மேலாளர் முத்துகுமார் கம்பெனிக்கு வந்தபோது, நுழைவு வாயில் பூட்டு உடைத்து, உள்ளே இருந்த ஏ.சி.,க்கான காப்பர் குழாய்கள், இன்வெட்டர்களுக்கு பயன்படுத்தப்படும் 34 பேட்டரிகள், ஒரு மின் மோட்டார் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
இதுகுறித்து முத்துகுமார் அளித்த புகாரின் பேரில், திருபுவனை சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் மற்றும் போலீசார் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
அதில், திருபுவனையை சேர்ந்த ராகுல், 21; பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ராகுலை கைது செய்த போலீசார், அவர் அளித்த தகவலின் பேரில், திருட்டு பொருட்களை வாங்கியதாக திருவண்டார்கோவில் பகுதியை சேர்ந்த பழைய இரும்பு வியாபாரி மாணிக்கம், 47; என்பவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பேட்டரிகள், ஏ.சி., காப்பர் குழாய்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர்.
