தனியார் கம்பெனியில் ரூ.2 லட்சம் பொருட்கள் திருட்டு
தனியார் கம்பெனியில் ரூ.2 லட்சம் பொருட்கள் திருட்டு
ADDED : ஏப் 14, 2026 09:21 PM
புதுச்சேரி: திருபுவனை பிப்டிக் தொழிற்பேட்டை தனியார் கம்பெனியில் ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்களை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருபுவனை பிப்டிக் தொழிற்பேட்டையில், சிம்கார்டு மற்றும் ஏ.டி.எம்., கார்டு தயாரிக்கும் தனியார் கம்பெனி இயங்கி வந்தது. இந்த கம்பெனியில், கோரைக்கேணியை சேர்ந்த முத்துகுமார், 40; தலைமை மேலாளராக பணி புரிந்தார். கம்பெனி கடந்த 2024ம் ஆண்டு நவம்பர் மாதம் மூடப்பட்டது.
இதற்கிடையே, முத்துகுமார் மட்டும் கம்பெனி உரிமையாளர் அறிவுறுத்தலின் பேரில், கம்பெனிக்கு அடிக்கடி வந்து பார்வையிட்டு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் தலைமை மேலாளர் முத்துகுமார் கம்பெனிக்கு வந்தபோது, நுழைவு வாயிலில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
இதனால், அதிர்ச்சியடைந்த முத்துகுமார் கம்பெனி உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த ஏ.சி.,க்கான காப்பர் குழாய்கள், இன்வெட்டர்களுக்கு பயன்படுத்தப்படும் 34 பேட்டரிகள், ஒரு மின் மோட்டார் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டிருந்தன.
இதுகுறித்து முத்துகுமார் அளித்த புகாரின் பேரில், திருபுவனை போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்து வருகின்றனர்.
