/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
குமரகுரு பள்ளம் அடுக்கு மாடி குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைக்க அரசு முடிவு
/
குமரகுரு பள்ளம் அடுக்கு மாடி குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைக்க அரசு முடிவு
குமரகுரு பள்ளம் அடுக்கு மாடி குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைக்க அரசு முடிவு
குமரகுரு பள்ளம் அடுக்கு மாடி குடியிருப்புகள் பயனாளிகளிடம் ஒப்படைக்க அரசு முடிவு
ADDED : நவ 24, 2025 06:53 AM

புதுச்சேரி: குமரகுருபள்ளத்தில் கட்டப்பட்டுள்ள 216 அடுக்குமாடி குடியிருப்புகளை விரைவில் பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
ராஜ்பவன் சட்டசபை தொகுதி அண்ணாசாலை மற்றும் வள்ளலார் சாலை சந்திப்பில் 0.4577 எக்டர் பரப்பளவு கொண்ட குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான இடம் உள்ளது.
இங்கு, குடிசைமாற்று வாரியத்தால் கட்டப்பட்ட ஏழு அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்த 224 வீடுகள் பாழடைந்து அச்சுறுத்தி வந்தன.
பாதுகாப்பு கருதி, புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகம் அறிவு றுத்தலின்படி சிதிலமடைந்து இருந்த குடியிருப்புகள் இடிக்கப்பட்டன.
இந்த இடத்தில் வசித்தவர்களுக்கு வீட்டு வசதி வழங்குவதற்காக பொதுப்பணித் துறையின் சிறப்பு கட்டடங்கள் கோட்டம் மூலம் 216 குடியிருப்புகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் 13 தளங்களாக அதாவது, தரைத்தளம் மற்றும் 12 அடுக்குமாடி தளம் கொண்ட பிரிகாஸ்ட் கான்கிரீட் தொழில்நுட்ப முறையில் 45.66 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது. பணிகள் முடிந்தும் கூட இன்னும் பயனாளிகளிடம் ஒப்படைக்கவில்லை.
இப்போது இந்த குடியிருப்புகளை பயனாளிகளிடம் ஒப்படைப்பதற்காக அமைச்சர் லட்சுமிநாராயணன் உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
குமரகுரு பள்ளத்தில் மொத்தம் 216 குடியிருப்புகள் உள்ளன. இந்த கட்டடத்தின் தரைதளம் முழுதும் பார்க்கிங் வசதிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. மற்ற 12 தளங்களில் 216 குடியிருப்புகள் பிரமாண்டமாக கட்டப்பட்டு உள்ளன. ஒவ்வொரு குடியிருப்பிலும் ஹால், படுக்கை அறை, சமையல் அறை கழிப்பறை மற்றும் பொது பயன்பாட்டு பகுதி வசதிகள் உள்ளன.
ஒரு குடியிருப்பின் பரப்பளவு 372 சதுர அடிகள் கொண்டது. பொது உபயோக இடமாக, படிக்கட்டு, காரிடர், ஷாப்ட் பகுதி, லிப்ட் பகுதி, பார்க்கிங் பகுதி, ஒரு குடியிருப்புக்கு 160 சதுர அடி விடப்பட்டுள்ளது. ஆக மொத்தம் ஒரு குடியிருப்பின் உபயோக பரப்பளவு 532 சதுர அடியாக விடப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடியிருப்பும் 21 லட்சம் ரூபாய் மதிப்பு கொண்டது. மொத்தமுள்ள 216 குடியிருப்புகளில் 209 குடியிருப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த வீடுகளுக்கு பங்களிப்பு தொகையாக 1.5 லட்சம் ரூபாய் பயளாளிகள் செலுத்த வேண்டும். ஆனால் பலரும் செலுத்த வில்லை. இதன் காரணமாகவே ஒப்படைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.
இந்த தொகை கட்டட பராமரிப்பிற்காக வங்கியில் டிபாசிஸ்ட் செய்யப்பட உள்ளது. அந்த வட்டியில் இருந்து லிப்ட், குடிநீர் உள்ளிட்ட பொது பயன்பாட்டிற்கான மின் கட்டணம் மாதம்தோறும் செலுத்தப்படும். பயனாளிகளிடம் விரைவில் ஒப்படைக்க தேதி கேட்கப்பட்டுள்ளது' என்றனர்.

