ரூ.750 கோடிக்கு ஒருங்கிணைந்த நதிக்கரை மேம்பாட்டுத் திட்டம் 4 பிராந்தியங்களில் செயல்படுத்த அரசு முடிவு
ரூ.750 கோடிக்கு ஒருங்கிணைந்த நதிக்கரை மேம்பாட்டுத் திட்டம் 4 பிராந்தியங்களில் செயல்படுத்த அரசு முடிவு
ADDED : மார் 09, 2026 03:43 AM
புதுச்சேரி: நான்கு பிராந்தியங்களில் 750 கோடி ரூபாய்க்கு ஒருங்கிணைந்த நதிக்கரை மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக திட்டம் ஆராய்ச்சி துறை இயக்குநர் ஷீலா தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நான்கு பிராந்தியங்களான புதுச்சேரி, காரைக்கால், ஏனாம் மற்றும் மாகே ஆகிய பகுதிகளில் உள்ள நதிக்கரைகளை உயிரோட்டமான பொது இடங்களாக மாற்றவும், நதி சூழலியலைப் பாதுகாத்து நிலையான சுற்றுலாவை மேம்படுத்தவும் புதுச்சேரி அரசு ஒருங்கிணைந்த நதிக்கரை மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கியுள்ளது. ரூ.750 கோடி மதிப்பில் தயாராகி வரும் இத்திட்டம், மத்திய அரசின் நிதி உதவியைப் பெறுவதற்காக மத்திய அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது.
முதற்கட்டமாக நதியின் நீளம் மற்றும் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதுச்சேரிக்கு ரூ.250 கோடி, காரைக்காலுக்கு ரூ.250 கோடி, ஏனாமிற்கு ரூ.150 கோடி, மாகேவிற்கு ரூ.100 கோடி என, தோராயமாக நிதி ஒதுக்கீடு மதிப்பிடப்பட்டுள்ளது. விரிவான திட்ட அறிக்கைகள் தயாரிக்கப்படும்போது இந்த மதிப்பீடுகள் இறுதி செய்யப்படும்.
அரியாங்குப்பம் - சங்கராபரணி, காவிரியின் கிளை ஆறுகள், கோதாவரி மற்றும் மாகே ஆறுகள் அந்தந்தப் பகுதிகளின் கலாசாரம் மற்றும் வாழ்வாதாரத்தோடு பிணைந்துள்ள நிலையில், பெருகிவரும் நகரமயமாக்கல் மற்றும் ஆக்கிரமிப்புகளால் பாதிக்கப்பட்டுள்ள இந்த இடங்களை மீட்டெடுப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இத் திட்டத்தின் கீழ், நவீன நடைபாதைகள், இருக்கை வசதிகள், கட்டடக்கலை நயம்மிக்க விளக்குகள் அமைக்கப்பட்டு நதிக்கரைகள் அழகுபடுத்தப்படும். நதிக்கரைகளைப் பலப்படுத்துதல், துார்வாருதல், கழிவுநீர் ஆற்றில் கலப்பதைத் தடுத்தல் மற்றும் பூர்வீக மரக்கன்றுகளை நடுதல் போன்ற பணிகள் முன்னெடுக்கப்படும். சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் படகு சவாரி வசதிகள் மற்றும் கலாசார நிகழ்வு மண்டலங்களும் உருவாக்கப்பட உள்ளன.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
