/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
என்.ஆர்.ஐ., சீட்டு மோசடியை தடுக்க அரசு அதிரடி: நோட்டரியிடம் சான்றிதழ் பெறும் முறை நீக்கம்
/
என்.ஆர்.ஐ., சீட்டு மோசடியை தடுக்க அரசு அதிரடி: நோட்டரியிடம் சான்றிதழ் பெறும் முறை நீக்கம்
என்.ஆர்.ஐ., சீட்டு மோசடியை தடுக்க அரசு அதிரடி: நோட்டரியிடம் சான்றிதழ் பெறும் முறை நீக்கம்
என்.ஆர்.ஐ., சீட்டு மோசடியை தடுக்க அரசு அதிரடி: நோட்டரியிடம் சான்றிதழ் பெறும் முறை நீக்கம்
ADDED : மே 15, 2025 12:39 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு மருத்துவ சீட்டுகளில் நடக்கும் மோசடியை தடுக்கும் வகையில் புதிய நடைமுறை வெளியிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் என்.ஆர்.ஐ., இட ஒதுக்கீடாக 116 இடங்கள் உள்ளன. குறிப்பாக புதுச்சேரி அரசு மருத்துவக் கல்லுாரியில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீடாக 27 மருத்துவ இடங்கள் உள்ளன.
இந்த சீட்டுகளில் வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களின் பிள்ளைகள் அதிக கட்டணத்தில் சேர்ந்து படிக்கலாம். நீட் தேர்வு எழுதிய அவர்களது நேரடி உறவினர்களின் பிள்ளைகளுக்கும் என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு திட்டத்தின் கீழ் எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட மருத்துவ சீட்டுகளை பெற பரிந்துரை செய்யலாம்.
ஆனால், கடந்தாண்டு இந்த என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு சீட்டுகளில் போலி உறவு முறை சான்றிதழ்கள் கொடுத்து தமிழகம் உள்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் சேர முயன்றது அம்பலமானது.
இது புதுச்சேரியில் உள்ள பெற்றோர், மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து என்.ஆர்.ஐ., சீட்டுகளில் போலி உறவு முறை சான்றிதழ் கொடுத்த மாணவர்களின் பெயர் பட்டியலை சென்டாக் அதிரடியாக நீக்கியது. தொடர்ந்து, போலி என்.ஆர்.ஐ., உறவு முறை சான்றிதழ் கொடுத்த மாணவர்கள், அவர்களது பெற்றோர், தமிழகத்தை சேர்ந்த புரோக்கர்கள் மீது வழக்கு பதிவும் செய்யப்பட்டது.
இது சம்பந்தமாக தீவிர விசாரணை நடந்து வரும் சூழ்நிலையில், இந்தாண்டு என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு சீட்டுகள் விஷயத்தில் கிடுக்கிபிடி உத்தரவினை சென்டாக் பிறப்பித்துள்ளது. இந்தாண்டு முதல் நோட்டரியிடம் சான்றிதழ் பெறும் முறையை சென்டாக் அதிரடியாக நீக்கியுள்ளது. அந்தந்த மாநில தாசில்தார்களிடம் கட்டாயமாக நேரில் சென்று என்.ஆர்.ஐ., உறவு முறை சான்றிதழ் பெற்று என்.ஆர்.ஐ., சீட்டிற்கு விண்ணப்பிக்க வேண்டும் என, உத்தரவு பிறப்பித்துள்ளது.
என்.ஆர்.ஐ., ஸ்பான்சர்டு சீட்டுகளுக்கு சுலபமாக விண்ணப்பிக்கும் வகையில் கடந்த காலங்களில் நோட்டரி அல்லது தாசில்தாரிடம் உறவு முறை சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்கலாம் என, தளர்வு அளிக்கப்பட்டது.
இதில் தான் வில்லங்கமே வந்தது. தாசில்தார்களிடம் யாரும் உறவுமுறை சான்றிதழ் வாங்கவில்லை. நேராக நோட்டரியிடம் சென்று, என்.ஆர்.ஐ.,க்கு தாங்கள் நேரடி உறவுகள் போன்று போலியாக உறவு முறை சான்றிதழ் பெற்று குறுக்கு வழியில் என்.ஆர்.ஐ., மருத்துவ சீட்டுகளை பெற விண்ணப்பித்தனர். இந்த போலி உறவு சான்றிதழ்களை சென்டாக்கினால் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்கமுடியவில்லை. அந்த என்.ஆர்.ஐ., உறவு சான்றிதழின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய முடியவில்லை. இதனால் என்.ஆர்.ஐ., சீட்டு மோசடியை தடுக்கும் வகையில் இந்தாண்டு நோட்டரியிடம் உறவுமுறை சான்றிதழ் பெறுவதை புதுச்சேரி அரசு நீக்கியுள்ளது.