வீடு கட்டும் திட்டத்தின் மானியத்தொகை உயர்வு :குடியரசு தின உரையில் கவர்னர் அறிவிப்பு
வீடு கட்டும் திட்டத்தின் மானியத்தொகை உயர்வு :குடியரசு தின உரையில் கவர்னர் அறிவிப்பு
ADDED : ஜன 27, 2026 04:32 AM
புதுச்சேரி: வீடு கட்டும் திட்டத்தின் மானிய தொகை அட்டவணை இனத்தவருக்கு ரூ.7 லட்சம், பொது பிரிவினருக்கு ரூ.6.25 லட்சமாக உயர்த்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என, கவர்னர் கைலாஷ்நாதன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி கவர்னர் கைலாஷ்நாதன் விடுத்துள்ள குடியரசு தின உரை:
இந்தியாவின் வளர்ச்சியை போலவே புதுச்சேரி மாநிலமும் வளர்ச்சி அத்தியாயத்தை எழுதிக் கொண்டிருக்கிறது. கல்வி, சுகாதாரம், உள்கட்டமைப்பு, நலத்திட்டங்கள் உள்ளிட்ட பல துறைகளில் புதுச்சேரி முன்னோடி மாநிலமாக உருவெடுத்துள்ளது.
இந்திய அளவில் சிறப்பாக நிர்வாகம் செய்யப்படும் மாநிலங்களில் ஒன்றாக புதுச்சேரி திகழ்கிறது. அரசு நிர்வாகத்தை மேலும் வலுப்படுத்த புதிய நியமனங்கள், பதவி உயர்வுகள் வழங்கப்படுகிறது. பல அரசு துறைகளில் காலியாக இருந்த 4,000 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. மேலும் 1,200 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு 500 பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது. இதற்காக தனியாக மாநில தேர்வு வாரியம் அமைக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையோடு பணி நியமனங்கள் நடைபெற்று வருகின்றன.
நீண்ட காலமாக தேங்கி கிடந்த பதவி உயர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நடவடிக்கை நிர்வாகத்தில் புது ரத்தம் பாய்ச்சி மக்கள் நலத்திட்டங்கள் பயனாளிகளுக்கு உரிய நேரத்தில் சென்றடைவதை உறுதி செய்துள்ளது.
ஏழை குடும்பத் தலைவிகளுக்கு மாத நிதி உதவி ரூ. 2,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு மாதம் ரூ. 16 கோடி செலவிடப்படுகிறது. இதனால் 65,000 குடும்பங்கள் பயன் பெறும். எல்லைத்தாண்டி மீன் பிடிப்பதால் எழும் சிக்கல்களைப் போக்க ஆழ்கடல் மீன்பிடித்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்காக 5 பெண்களுக்கு ஆழ்கடல் மீன்பிடி படகுகள் தரப்படவுள்ளது.
இளைஞர்கள்தான் எதிர்கால இந்தியாவின் நம்பிக்கை. அவர்கள், வேலை தேடுபவராக இல்லாமல் வேலை தருபவர்களாக சுய தொழில் தொடங்க தொழிற்பயிற்சிகள், திறன் மேம்பாடு கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இளைஞர்கள் உள்ளூரில் வேலை வாய்ப்பு பெறும் நோக்கில் தொழிற்நுட்ப பூங்கா அமைக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
'அனைவரின் வளர்ச்சி, அனைவருக்குமான வளர்ச்சி' என்ற பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வை, நாட்டின் நிலையான வளர்ச்சி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியாக இருக்க வேண்டும். இதற்கு ஏற்ப ஒடுக்கப்பட்டோர், பின்தங்கிய நலிவடைந்த சமூகத்தினர், பெண்கள், மாற்று திறனாளிகள், முதியோர் அனைவருக்குமான சமூக பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
ஏழைகள் வீட்டு கனவை நினைவாக்கும் விதமாக மாநில அரசின் வீட்டு வசதி திட்டங்கள் பிரதம மந்திரியின் வீட்டு வசதி திட்டத்தோடு இணைத்து உயர்த்தப்பட்ட மானியம் வழங்கப்படுகிறது. இதன்படி பொதுப்பிரிவினருக்கு வீடு கட்ட ரூ. 5 லட்சமும், அட்டவணை இனத்தவருக்கு ரூ. 6.25 லட்சமும் மானியமாக தரப்படுகிறது. இதனை பொதுப்பிரிவினருக்கு ரூ. 6.25 லட்சமாகவும், அட்டவணை இனத்தவருக்கு ரூ. 7 லட்சமாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முதியோர், கணவரால் கைவிடப்பட்ட பெண்களுக்கான ஓய்வூதியம் ரூ. 500 உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக மாதம் ரூ. 9.8 கோடி ஒதுக்கப்படுகிறது. இதனால் 1.92 லட்சம் பேர் பயன்பெறுவர்.
புதுச்சேரியில் கட்டப்படவுள்ள இந்திரா சதுக்கம் முதல் ராஜிவ்காந்தி சதுக்கம் வரையிலான நான்கு வழி மேம்பாலம், அரியாங்குப்பம் முதல் முள்ளோடை வரை 13.5 கிமீ நான்கு வழிச்சாலை, மரப்பாலம் வரையலான அகலப்பாதை ஆகியவை புதுச்சேரி சாலை போக்குவரத்து கட்டமைப்பின் மகுடமாக அமையும். சென்னை - விழுப்புரம் - சிதம்பரம் போன்ற முக்கிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் மேம்பாலம் மக்களின் பயண நேரத்தை குறைக்கும். பாதுகாப்பான பயணத்தையும் உறுதி செய்யும். இதனால் புதுச்சேரியில் போக்குவரத்து நெரிசல் 55 சதவீதம் குறையும்.
திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலை உலக சுற்றுலா தலமாக மேம்படுத்த திருநள்ளாறு கோவில் நகர திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை பாராட்டும் விதமாக அமைந்துள்ளது. புதிய குற்றச்சட்டங்களை செயல்படுத்துவதில் புதுச்சேரி காவல்துறை மத்திய அரசால் பாராட்டப்பட்டுள்ளது.
மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியே அரசின் குறிக்கோள். அரசு பங்களிப்போடு மக்களின் ஒத்துழைப்பும் இணைந்தால் மட்டுமே புதுச்சேரி மாநிலம் தனிச்சிறப்போடு வளர்ச்சி அடைய முடியும். நாம் ஒற்றுமையுடன் செயல்பட்டு பிரதமர் கூறிய 'பெஸ்ட் புதுச்சேரி'யை உருவாக்குவோம். வளர்ந்த இந்தியா வளரும் புதுச்சேரி இலக்கை அடைய ஒன்றிணைந்து செயல்படுவோம். அனைவருக்கும் இந்திய குடியரசு தின நல்வாழ்த்துகள். இவ்வாறு உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
